Designed by Iniyas LTD
அ.தி.மு.க.வில் ‘சீட்’ கேட்டு திருநங்கை சுதா விருப்ப மனு!
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஜனவரி மாதம் 20-ந் தேதி முதல் விருப்ப மனு அளிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 3-ந் தேதி விருப்ப மனு அளிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிக தொண்டர்கள் திரண்டு வந்து மனு அளித்ததால், மேலும் 3 நாட்கள் விருப்ப மனு அளிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டது. பிப்ரவரி 6-ந் தேதியுடன் விருப்ப மனு அளிக்கும் நாள் முடிவடைந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிட மொத்தம் 26 ஆயிரத்து 174 பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது, அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வில் ‘சீட்’ கேட்டு திருநங்கை சுதா என்பவர் நேற்று மனு அளிப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு ஆதரவாக சுமார் 50 திருநங்கைகளும் அவருடன் வந்தனர்.
மேள-தாளம் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் திருநங்கைகள் வந்ததால், அ.தி.மு.க. அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. உடனடியாக, அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். அ.தி.மு.க. தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் திருநங்கை சுதா விருப்ப மனுவை வழங்கினார். உடனடியாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வதாக அவரிடம் மகாலிங்கம் உறுதி அளித்தார்.
அதன்பின்னர், வெளியே வந்த திருநங்கை சுதா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் திருநங்கைகளும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்தவர் அவர். எனவே, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கும் வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் நான் இன்று விருப்ப மனு கொடுத்துள்ளேன். அ.தி.மு.க.வில் ஏற்கனவே விருப்ப மனு அளிப்பதற்கான தேதி முடிந்துவிட்டாலும், எங்களது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில், விருப்ப மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.