Designed by Iniyas LTD
ஆகஸ்டு மாத இறுதியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுமாம்
சென்னையில் முதல்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. முதல் வழித்தடத்தில், விமான நிலையம்-சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு (ஓ.டி.ஏ.), ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன.
சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் குழுவினருடன் நேற்று ஆய்வு நடத்தினார். இதற்காக விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு பெங்களூரில் இருந்துவந்த ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் மற்றும் குழுவினரை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சி.பங்கஜ்குமார் பன்சால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அந்த ரெயில் நிலையத்தில் இருவரும் மரக்கன்றுகளை நட்டனர். ஒரு ரெயில் பாதையில் பேட்டரியால் இயங்கும் 3 டிராலிகளும், மற்றொரு ரெயில் பாதையில் டீசல் ரெயில் என்ஜினும் நிறுத்தப்பட்டிருந்தன. டிராலியில் பாதுகாப்பு ஆணையர், நிர்வாக இயக்குனர் சி.பங்கஜ் குமார் பன்சால் மற்றும் பொறியாளர்கள் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மற்றொரு ரெயில் பாதையில் டீசல் என்ஜினும் மெதுவாக இயக்கப்பட்டது. பகல் 2 மணி அளவில் ஆலந்தூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ஆலந்தூர் முதல் சின்னமலை வரை ஆய்வு செய்தார். விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சின்னமலை வரை சுமார் 8 மணி நேரம் ஆய்வு நடத்தப்பட்டது. அரை கிலோ மீட்டருக்கு ஒரு முறை டிராலியை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி அதன் உறுதித்தன்மையை நவீன கருவிகளின் உதவியுடன் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். அந்த பாதையில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ‘ஹேண்டி லிவர்’ உயர்பாலத்திலும், கிண்டியில் மின்சார ரெயில் பாதையை கடந்து செல்லும் ராட்சத இரும்பு பாலத்திலும் ஆய்வு நடந்தது.
பின்னர் பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஆய்வின் முதல் நாளில் தண்டவாளங்கள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாளை (இன்று) சிக்னல் அமைக்கப்பட்டுள்ள முறைகள், மெட்ரோ ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த சோதனையில் ரெயில் தண்டவாளங்கள், வழித்தட வரைபடம், கட்டிடங்கள், சிக்னல்கள், பயணிகளுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், ரெயில்கள் ஆய்வு போன்ற அம்சங்கள் இடம் பெறுகின்றன. இதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு விரைவில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். இந்த பாதையில் நடந்துள்ள பணிகள் திருப்தியாக உள்ளன.
ஆகஸ்டு மாத இறுதியில் இந்தப் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்னுடைய பணி மெட்ரோ ரெயில் பாதுகாப்பாக உள்ளதா? ரெயில்களை இயக்கலாமா? என ஆய்வு செய்வது தான். ஒப்பந்ததாரர்கள் பிரச்சினையால் காலதாமதம் ஆகிறதா? என்பது எனது பணி அல்ல. ஆனாலும் திட்டமிட்டபடி தான் பணிகள் நடந்து வருகிறது. திருமங்கலம் – எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.