தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆட்சி மாற்றத்தை பா.ம.க வால் மட்டுமே கொடுக்க முடியும்!ஜி.கே.மணி

201604040757161551_PMK-can-be-given-only-Regime-change-In-Tamil-Nadu-GK-Mani_SECVPFதமிழக தேர்தலில் தற்போது 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால், இது பா.ம.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது பொதுநல அமைப்புகள், பெண்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோருடைய ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது. இவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஆட்சி மாற்றம் தேவை என்கின்றனர். இந்த மாற்றத்தை பா.ம.க.வால் மட்டுமே கொடுக்க முடியும்.

தேர்தலில் மதுவிலக்கு பிரசாரமே எங்களின் முக்கிய பிரசாரமாக அமையும். மதுவிலக்குக்காக கடந்த 26 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தேர்தல் வந்ததும் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு கொள்கையை கையில் எடுத்து கொண்டுள்ளனர். பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் நல்லாறு, ஆனைமலை, அமராவதி, ஓடைக்கரை, அவினாசி-அத்திக்கடவு உள்ளிட்ட 2-வது பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். கரும்பு, நெல், கொப்பரை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தொழில்துறையை மேம்படுத்த வரிசலுகை வழங்குவதோடு, புதிய தொழில் தொடங்க திறன் சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படும். வேளாண் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் உருவாக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

சுங்ககட்டணத்தை உயர்த்தியதற்கு பா.ம.க. சார்பாக கண்டத்தை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் கருத்து கணிப்புகள் போலியாக தயாரிக்கப்படுபவை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் முன்வைத்துள்ளனர். இதற்கு தகுதியான கட்சி பா.ம.க. தான். 66 சதவீதம் இளைஞர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

தற்போது மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் உள்கட்சி குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. தே.மு.தி.க. தங்களுடன் இணைந்து விடும் என்று தி.மு.க. எதிர்பார்த்து இருந்தது.

ஆனால், தற்போது கூட்டணியின்றி தி.மு.க. தனித்து விடப்பட்டுள்ளது. அனுபவமுள்ள மூத்த தலைவர் வைகோ. ஆனால் அவர் தனது கொள்கையில் இருந்து மாறிவிட்டார். அ.தி.மு.க.வுக்கு மாற்று அரசை மக்கள் எதிர்பார்த்திருப்பதாலேயே பா.ம.க. தற்போது தனித்து தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். தேர்தலில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...