Designed by Iniyas LTD
ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கப்படும்
சென்னையில் உள்ள ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி மூன்று மாதத்தில் தொடங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆட்டோவில் கட்டண விவரப் பட்டியல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 நிபந்தனைகளைப் பின்பற்ற உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறித் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிசன்கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. இதில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிசங்கர், போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறியத் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளதாகவும், இன்னும் மூன்று மாதங்களில இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது எஸ்.எம்.எஸ் மூலம் புகார் அளிக்க ஏதுவாக மென்பொருள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், இதற்கு நீதிமன்றம் காலஅவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மூன்று மாதத்திற்குள் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தக் காலஅவகாசம் வழங்கி, வழக்கு விசாரனையை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.