தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட்

இங்கிலாந்து–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் தொடரை சொந்தமாக்கியது.இந்த நிலையில் இங்கிலாந்து–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இந்த போட்டி தொடர் மிகவும் முக்கியமானதாகும். இந்த போட்டி தொடரில் குறைந்தபட்சம் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் வெஸ்ட்இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். தற்போது ஒருநாள் போட்டி தரவரிசையில் இலங்கை அணி 86 புள்ளிகளுடன் 8–வது இடத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணி 78 புள்ளிகளுடன் 9–வது இடத்தில் இருக்கிறது. வருகிற 30–ந் தேதி நிலவரப்படி ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தர வரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.இந்த போட்டி தொடரில் 4 ஆட்டங்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெறாவிட்டால் அடுத்த ஆண்டு ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதி சுற்று போட்டியில் விளையாடி முதல் 2 இடங்களை பிடித்தால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும். வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ஆட்டங்களில் வெற்றி கண்டால் இலங்கை அணி தரவரிசையில் 9–வது இடத்துக்கு தள்ளப்படுவதுடன் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பையும் இழக்கும்.

உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் நோக்கில் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் அணிக்கு திரும்பி இருப்பது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படும். அத்துடன் உள்ளூரில் தொடரை வெல்ல இங்கிலாந்து முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்–2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Comments
Loading...