Designed by Iniyas LTD
இசையால் மேன்மை பெற்ற கலாநிதி பஞ்சாபிகேசன்! முன்னாள் துணைவேந்தர் புகழாரம்!!
செண்பகம் நிருபர். ஈழத்தின் தனித்துவ இசை மேன்மை கொண்ட ஆளுமையாக விளங்கியவர் கலாநிதி பஞ்சாபிகேசன் என்று புகழாரம் சூட்டினார் முன்னாள் துணைவேந்தரும் ஈழத்தின் சமூகவியல் முன்னோடிப் பேராசிரியருமான என். சண்முகலிங்கன்.
2010இல் தன்னுடைய துணைவேந்தர் காலத்தில் பஞ்சாபிகேசன் அவர்களுக்கு கலாநிதி பட்டம் வழங்கி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பெருமை பெற்றமை எங்களுடைய பாக்கியம் என்றும் நினைவு கூர்ந்தார்.
பாரம்பரிய பேணுகை, கலை வாழ்வை, ஆன்மீகமாக கொண்ட பக்குவம் அவரது உயர் தனிப்பண்புக்கள், பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்தான வித்துவானாக கௌரவம் பெற்றவர் என்றும் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழாராட்சி மாநாட்டில் இசை வழங்கிய சரித்திரப் பெருமை பெற்றவர் என்றும் முன்னாள் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
நாதஸ்வர வித்துவான் கலாநிதி கே.எம்.பஞ்சாபிகேசன் அவர்களின் ஒராண்டு நினைவு நிகழ்வு சாவகச்சேரி தென்மராட்சி கலை மன்றத்தில் ஓய்வு நிலை அதிபர் அ. கையிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் இடம் பெற்றபோது அங்கு நினைவுப் பேருரை ஆற்றியபோதே முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்து இசைப் பாரம்பரியத்தில் செழுமையாகத் தொடரும் பண்பாட்டின் அடையாளமாக நாதஸ்வரக்கலை விளங்குகின்றது. இந்தக் கலையின் தனித்துவ ஆளுமையாக விளங்கியவர் கலாநிதி கலாநிதி கே.எம்.பஞ்சாபிகேசன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்த வாசிப்பு, சபை அறிந்த கச்சேரி ஒழுங்கு, சாஸ்திரிய இசை துணுக்கம், எல்லையில்லாத மனோதர்மம் அவரது இசையின் தனித்துவங்கள், நீண்டநாள் மௌனம் கலைத்து எங்கள் தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இணைந்து வாசிக்க சம்மதித்த ஒப்பற்ற கலைஞர் என்றும் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது, கலாநிதி பஞ்சாபிகேசனின் திருவுருவப்படம் பெரும் எண்ணிக்கையான கலைஞர்களின் மங்கல இசையுடன் சந்திரசேகர வாரி வனேஸ்வரன் சிவன் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டது.
அத்துடன் நாதாஞ்சலி வழங்கிய நாதஸ்வர வித்துவான்கள் எம்.பி.பாலகிருஷ்ணன், ஏ.பாலசுதந்திரன், தவில் வித்துவான் ஆர்.எஸ் புண்ணியமூர்த்தி, மற்றும் பஞ்சாபிகேசன் அவர்களின் பேரர்களான இளம் நாதஸ்வரக்கலைஞர்களான சித்தார்த்தன், பிரதித்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் உதவிப்பதிவாளர் திரு.ஜெயக்குமார் நன்றியுரை வழங்கினார்.








