Designed by Iniyas LTD
இந்தியப் பிரதமர், த தே கூ பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் கூறினார் – மகிந்த
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த சமயம் இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்புக் குறித்து அமைச்சரவையில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் கூறினார். அத்துடன் பேச்சுக்காக விசேட பிரதிநிதியை இந்தியா நியமிக்க வேண்டும் என்ற கூட்டமைப்பினரின் கோரிக்கையைத் தான் நிராகரித்திருந்தார் என்பதையும் மோடி ஏனக்குத் தெளிவுபடுத்தினார்” -என்றார். தவிர, இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு விரோதமாக செயற்படாது என மோடி தன்னிடம் உறுதியளித்தார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேசமயம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா தனது கடும் நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது என்பதைத் தான் உணர்ந்துள்ளார் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.