Designed by Iniyas LTD
இந்தியாவின் அதிவேக ரயில் பயணம் இன்று தொடங்கியது!
நாட்டின் தலைநகரான டெல்லியை தாஜ் மஹால் அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரை இணைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் அதிவிரைவு ரெயில் சேவையை ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு இன்று காலை தொடங்கி வைத்தார்.

முழுமையான ஏ.சி. வசதியுடன் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ டெல்லி-ஆக்ரா இடையிலான சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தை நூறு நிமிடங்களுக்குள் கடந்து காலை 11.40 மணியளவில் ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும்.
பின்னர், மாலை 5.50 மணிக்கு ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு டெல்லி சென்றடையும். இதேபோல், வெள்ளிக்கிழமை நீங்கலாக, வாரத்தின் ஆறுநாட்கள் டெல்லி நிஜாமுதீன் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, 9.50 மணிக்கு ஆக்ராவில் உள்ள கண்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும்.
இதர சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் கட்டணத்தைவிட இந்த ‘டெல்லி-ஆக்ரா கட்டிமன்’ ரெயிலின் கட்டணம் 25 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த ரெயிலில் உள்ள உணவகத்தில் கோதுமை உப்புமா, மினிதோசை, காஞ்சிபுரம் இட்லி, பழவகைகள், சிக்கன், முட்டை உள்ளிட்ட உணவு வகைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்-சென்னை உள்பட மேலும் ஒன்பது புதிய வழித்தடங்களில் இதுபோல் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய புதிய சிறப்பு ரெயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.