Designed by Iniyas LTD
இந்தியாவிற்கான எயர் கனடா அடுத்தாண்டில் இருந்து மீண்டும் ஆரம்பம்
கனடாவின் ரொறன்ரோவில் இருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கான நேரடி விமான சேவையினை அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக எயர் கனடா பயணிகள் விமானச் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ள எயர் கனடா நிறுவனம், 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ரொரன்ரோவுக்கும் நியூ டெல்லிக்கும் இடையேயான நேரடி விமானச் சேவை முன்னர் இடம்பெற்று வந்த போதிலும், சுமார் எட்டு வருடங்களின் முன்னர் அது நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சேவையை ஆரம்பிப்பதன் மூலம், இந்தியா உள்ளிட்ட அந்த பிராந்திய நாடுகளுக்கான சேவையில் புதிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எனவும் எயர் கனடா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தினை மையமாக வைத்து தனது சர்வதேச விமான பயணச் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள எயர் கனடா, அதன் ஒரு மிக முக்கிய நடவடிக்கையாக இந்த டெல்லிக்கான விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இந்த நீண்டதூர விமானச் சேவைக்காக தாம் போயிங் 787 ரக விமானங்களை பயன்படுத்தவுள்ளதாகவும், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒரேயொரு நேரடி விமானச் சேவையாக தமது இந்த சேவை விளங்கும் எனவும் அவர் விபரித்துள்ளார்.கிழமைக்கு நான்கு சேவை இடம்பெறும் எனவும் டிசம்பர் மாதம் 9ம் திகதிக்குப்பினர் பயண பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.