Designed by Iniyas LTD
இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய பரிந்துரை
இந்தியாவில் தீவிரவாதத்தில் தொடர்புடைய குற்றங்களைத் தவிர வேறு எந்த குற்றத்துக்கும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என மத்திய அரசிடம் சட்டக் கமிஷன் பரிந்துரைக்க உள்ளது.
உலகில் மரண தண்டனை நடை முறையில் உள்ள 59 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி ஆராயும்படி நீதிபதி ஏ.பி. ஷா தலைமையிலான சட்டக் கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷன் வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் தீவிரவாதம் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கலாம், இதர குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 270 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை உறுப்பினர்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மரண தண்டனை நடைமுறையில் இருக்கவேண்டும் என 1962-ல் சட்ட கமிஷன் பரிந்துரைத்தது. இப்போது கமிஷன் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. சட்டக் கமிஷனின் அறிக்கையை அதன் தலைவர் நீதிபதி ஏ.பி.ஷா விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.