தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் வசிக்கும் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் – மாவை

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் குறித்த அகதிகளின் நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.mavai_senathirajah

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த கோரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அகதிகள், இலங்கை திரும்பினால் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா அங்கு சுட்டிக்காட்டினார்.

இதேவேளை 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தால் அகதிகளாக இந்தியாவில் வசிக்கும் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதானால், இரு நாட்டு அரசுகளும் உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள வேண்டும் என்று ஈழத்தமிழ் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் பொருளாளர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவுடன் என்ன பேசினோம் என்ற விபரத்தை இந்தியாவும் வெளியிடாது; நாமும் வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.

Comments
Loading...