Designed by Iniyas LTD
இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 
இந்த மாநாட்டில் ஒபாமா பேசியதாவது:- தற்போதைய சூழலில் நாம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால்.., உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக திகழும் அமெரிக்காவும், ரஷியாவும் தங்கள்வசமுள்ள அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்ளாத வரையில் இதரநாடுகளும் பெரிய அளவில் அணு ஆயுத குறைப்பில் ஈடுபட முன்வராது. அதற்கேற்ப பாதையை அமைத்து இதர நாடுகளுக்கு வழிகாட்ட நாங்கள் (அமெரிக்கா) தயாராக இருக்கிறோம். இதேபோல், இவ்விவகாரத்தில் தெற்காசிய நாடுகளான பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இருநாடுகளும் தங்களது அணு ஆயுத பலத்தை குறைத்துக் கொள்வதில் முன்னேற்றம் காண வேண்டும். ராணுவமயம் என்ற பெயரில் இந்த நாடுகள் தொடர்ந்து தவறான வழியில் போய்விடக் கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள வட கொரியா முற்றிலும் வேறுவிதமாக நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுதொடர்பாக, உலகளாவிய வகையில் ஒன்றிணைந்து நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.