Designed by Iniyas LTD
இந்திய ஹாக்கி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுமா?..
7 அணிகள் இடையிலான 25-வது சுல்தான் அஸ்லான் ஷா ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 5-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை சந்தித்தது.
முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. அத்துடன் பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய அணியினர் வீணடித்தனர். 28-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நியூசிலாந்து அணி முதல் கோல் அடித்தது.
36-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப்சிங் பதில் கோல் திருப்பினார். 41-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் நிகோலஸ் வில்சன் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். கடைசி 7 நிமிடம் இருக்கையில் கிடைத்த பெனான்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர் ஹர்மன்பிரீத்சிங் மெதுவாக அடித்து வீணாக்கினார்.
முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து தொடர்ந்து 5-வது வெற்றியுடன் (15 புள்ளி) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணி 5 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் (வெள்ளிக்கிழமை) மலேசியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். ‘டிரா’ கண்டால் கூட தகுதி இழக்க நேரிடும்.