தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்னும் 3 மாதத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.  தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் மதுக்கடைகளின் நேரத்தை காலை 10 மணிக்கு திறப்பதை 12 மணிக்கு திறக்க நடவடிக்கை மேற்கொண்டார்.  இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 500 மதுக்கடைகளை பார்களுடன் சேர்த்து மூடுவதற்கும் உத்தரவு பிறப்பித்தார்.  wain

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த மதுக்கடைகளை மூடுவது என்று மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் எடுத்து அரசுக்கு வழங்கினார்கள்.  அதன்படி 500 மதுக்கடைகள் கடந்த வாரம் மூடப்பட்டது. மூடப்பட்ட மதுக்கடைகளின் பட்டியலும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டது.  பட்டியலை பார்த்த பொதுமக்கள் பலர் முழு திருப்தி அடையாமல், பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகளையும், கோவில் அருகே உள்ள மதுக்கடைகளையும் அகற்றாமல் வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றி உள்ளார்களே என்று ஆதங்கப்பட்டனர்.  இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள் மொத்தம் எத்தனை உள்ளது என்று மாவட்ட வாரியாக தனியாக ஒரு பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.  பள்ளி கல்லூரி அருகே எத்தனை மதுக்கடைகள் உள்ளது? கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அருகே இன்னும் எத்தனை மதுக்கடைகள் உள்ளது, ரெயில் நிலையம், பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைகள் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த பட்டியலை வைத்து 2-வது கட்டமாக இன்னும் 3 மாதத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு ஒவ்வொரு மதுக்கடைகளின் விபர பட்டியல் எங்களிடம் தயாராகவே உள்ளது. அரசு கேட்கும்போது அதை சமர்பிப்போம் என்றனர்.

Comments
Loading...