Designed by Iniyas LTD
இரகசிய கூலிப்படையை செயற்படுத்த இராணுவப் புலனாய்வுத்துறையால் முடியும்? வாய்திறந்த கோத்தா
இரகசிய கூலிப்படை ஒன்றை செயற்படுத்துதற்கு எந்தவித இராணுவப் புலனாய்விற்கும் முடியும் என்ற போதிலும் அது இராணுவத் தளபதியின் கண்காணிப்பிலேயே செயற்படுத்தப்படும் என முன்னாள் பாதுகாப்புச செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் தான் பதவிவகித்த காலத்தில் அப்படிப்பட்ட கூலிப்படைகளை இயக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியில் இரகசிய கூலிப்படைகளை வைத்து தமிழர்கள் மற்றும் பலரை வெள்ளை வானில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் முப்படைத் தளபதியும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று கொழும்பு – ஸ்ரீ கதிரேசன் வீதியை திறந்துவைத்து உரையாற்றிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மேல்மாகாணத்தில் மட்டும் 551 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்ததற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
அவ்வாறான கொலைப் படைகளை உருவாக்க இராணுவத்திற்கு முடியும் என்ற போதிலும், அது குறித்து இராணுவத் தளபதி அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதோடு அந்தப் படை சார்ந்த எழுத்து மூலமான ஆவணங்கள் இராணுவத் தலைமையகத்தில் பேணப்பட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் பதவிவகித்த காலத்தில் இப்படியான கூலிப்படைகள் இருந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலில் பிரவேசிப்பதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, 2020ஆம் ஆண்டில் நடத்த எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எண்ணமும் தனக்கு இல்லை என்றும் இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியோ அல்லது ஜனாதிபதி பதவியோ தனக்கு அவசியம் இல்லை என்று கூறியுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் எந்த தலைமைத்துவத்தையும் வகிக்க தன்னால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.