Designed by Iniyas LTD
இருட்டில் உறங்கும் எமக்கு வெளிச்சம் தருவீர்களா????

ஒன்றும் புரியவில்லை
இன்றும் வெளிச்சங்கள் இல்லை,
அருகிருக்கும் தோழனின் அம்மா
நித்தம் வந்தாள்?….
பக்கத்தில் எனக்கும்
மலர் வைத்துச் சென்றாள்…….
அவள் வரவும் இன்று இல்லை,
விடுதலைக்காய் வீழ்ந்த தோழர்களை
வித்துடலாய் காவி வந்த
தோழர்களே! எம்மை
துயிலெழுப்பி மவுனமாய்
சத்தியம் செய்து சென்றீரே!……
உங்களை இன்று காணவில்லையே?…..
எழுந்து வந்து தேடவும்
முடியவில்லை.
இன்று எல்லாம் மாற்றமாய் கிடக்கிறது
சிங்கள மொழி கேட்கிறது
சீறும் இயந்திரம் எங்கள்
கல்லறை மீது போகிறது
சப்பாத்து கால்கள் எங்கள்
இல்லங்களை சாக்கடை ஆக்கின்றதே!…
சத்தியம் செய்து சென்ற தோழர்களே
லட்சியம் மறந்து போனிரோ?
பூமிக்குள் நாம் படும் வேதனை புரியவில்லையா?
எம்மை புதைத்த தோழர்களே?……..
கல்லறைக்குள் எம்மை
கண்ணீர் வடிக்கவிட்டு
எங்கு போனீர்கள்?
எம் கனவுகளை சுமந்து கொண்டு
நீங்கள் எம்மை
புதைத்த இடம் தேடி வருவீர்களா?…….
இருட்டில் உறங்கும் எமக்கு
வெளிச்சம் தருவீர்களா????
ஆக்கம்:-
சி.கலைவிழி