Designed by Iniyas LTD
இருளில் மொபைல்போன் பார்க்கலாமா? …
இருளாக இருக்கும் இடங்களில் திரைகளைப் பார்த்தால், அதிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளியால் கண் கோளாறுகள் ஏற்படலாம், பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது.
மொபைல்போன்கள், கம்ப்யூட்டர், டிவி திரைகளை அதிக நேரம் பார்ப்பது குழந்தைகள், பதின்பருவத்தினருக்கு கண் மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
அதிக நேரம் ஸ்கிரீன்களைப் பார்ப்பது உடல்பருமன், கண் வறண்டு போவது, தலைவலி, கண் வலி, தூக்கமின்மை, கிட்டப்பார்வை என்பவை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
.இது தொடர்பில் அமெரிக்க கண் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.டேவிட் எப்லே, “ நீங்கள் அதிக தூரம் ஓடினால், உங்கள் கால்கள் வலிக்கும்,
அதனால் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பீர்கள். அதேபோல தான் கண்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்..
20 நிமிடங்கள் படித்தாலோ, திரைகளைப் பார்த்தாலோ, 20 வினாடிகளுக்கு தூரமாக பார்வையைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இப்படிச் செய்யவேண்டும்.
இது, கண்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொபைல்போன் உள்ளிட்டவற்றின் திரைகளை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்த்து, புத்தகங்களைப் படிக்கலாம். படிக்கும் போதும் போதுமான இடைவேளையில் தூரமாகப் பார்வையைச் செலுத்த வேண்டும்.
குழந்தைகள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 மணி நேரத்துக்கு மேல் திரைகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம்.
பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல்போன், வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, அந்த நேரத்தைக் குறைக்க வேண்டும்’’ என அவர் கூறுகின்றார்.
குழந்தைகள் மொபைல்போன் உள்ளிட்ட திரைகளைப் பார்ப்பதைக் குறைக்க, முதலில் பெற்றோர்கள் அதைக் கடைபிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முன்னுதாரணாமாக இருந்து, அவர்களின் அந்தப் பழக்கத்தைக் குறைக்க முயற்சிப்பது நல்லது.
டிவி, வீடியோகேம், மொபைல்போன் போன்ற திரைகள் இருக்கும் பொருள்களை படுக்கையறைக்குக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவை உங்கள் தூக்கத்தை பாதிக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வீட்டிலிருக்கும் அனைவரும் தொழில்நுட்பக் கருவிகளைத் தவிர்த்து நேரடியாகப் பேசிக்கொள்வது நல்லது. வீட்டுக்குள்ளேயே இருக்காமல் வெளியில் செல்வது,
நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நடைப்பயிற்சி செய்வது என்று அன்றாட வாழ்க்கையை மாற்றிக்கொள்வது சிறந்தது.
குழந்தைப் பருவத்தில் அதிக நேரம் திறந்தவெளியில் இருப்பது கிட்டப்பார்வை ஏற்படுவதை குறைக்கிறது என்று கண் மருத்து நிபுணர் டேவிட் எப்லே கண்டறிந்துள்ளார்.
திறந்தவெளியில் மொபைல்போன் போன்ற திரைகள் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தினால், சூரிய ஒளி திரைகளில் பட்டு எதிரொலித்து நம் கண்களில் படுவதால், கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார் எப்லே.
இருளாக இருக்கும் இடங்களில் திரைகளைப் பார்த்தால், அதிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளியால் கண் கோளாறுகள் ஏற்படலாம், பார்வை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.
அந்த நீல நிற ஒளி கண்ணின் ரெட்டினா பகுதி செல்களை அழிக்கும் தன்மையுடையது. அதனால், இருளான இடங்களில் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆய்வாளர் மருத்துவர் அஜித் கருணாரத்னே கூறுகிறார்.
இதை அமெரிக்காவில் இருக்கும் டோலெடோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளமை குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.

