தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இறந்த காலத்திலிருந்து முன்னேறுவது இலகுவானதல்ல! கேற் குறோனின் பேர்மெ

19_02_09_01

மே 18 இலங்கையில் நினைவு கூரலுக்கான நாள். நீண்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 7ம் ஆண்டை நினைவு கூரும் நாள். ஆனால் இலங்கையின் இரண்டு பெரிய இனக் குழுமங்கள் இந்நாளை முற்றிலும் வேறுபட்ட நிலையில் நின்று நினைவு கூருகின்றன.

தெற்கில் மக்கள் பெரும்பான்மை இனச் சிங்கள மக்கள் பிரிவினைவாதிகளான புலிகளைத் தோற்கடித்த வெற்றியை கொண்டாடும் இராணுவ அணிவகுப்புகளைத் தரிசிப்பதற்காக திரண்டு இருப்பார்கள். வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மை இனமான தமிழர்கள் அவர்களது உற்றார் உறவினர் நண்பர்களது மரணத்தை நினைவு கூருவதற்காக திரண்டிருப்பார்கள். இறுதிப் போரில் பாதுகாப்புவலையங்கள் என அரசஇராணுவத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் அதனுள் இருந்த வைத்தியசாலைகளினுள்ளும் எறிகணைத் தாக்குதல்களாற் கொல்லப்பட்ட மக்களையும் 1980இல் இருந்து இறுதிப் போர்வரையும் அரசபடைகளால் கொல்லப்பட்டவர்களையும் நினைவு கூர்வதற்காக அந்நாளில் அவர்கள் திரண்டிருப்பார்கள். ஆயினும் விடுதலைப்புலிகளுடன் இணைந்து போராடிய தங்களது அன்புக்குரியவர்களை அவர்களைக் குறித்து அஞ்சலி செய்ய யாராவது விரும்பினால் அதனை இரகசியமாகவே செய்யமுடியும். யுத்தம் முடிந்து ஏழாண்டுகளாகியும் விடுதலைப்புலிகளைப் பெயர் குறித்து நினைவு கூர்வது தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

2015 வரையும் குறித்த நினைவு நாள்(மே 18) வெற்றி நாள் என்றே குறிக்கப்பட்டு வெற்றி மமதையுடன் சனாதிபதி மகிந்த இராசபக்சவின் சர்வாதிகார அரசினால் கொண்டாடப்பட்டு வந்தது. மகிந்த அரசாங்கம் குறித்த வெற்றியை அடைந்த முறையைச் சர்வதேச மனிதஉரிமைகட் சட்டத்திற்கு விழுந்த மரண அடி என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர்கள் குழு விபரித்திருந்தது.

தெற்கில் மகிந்தவின் ஆளுகை என்பது சிவில் சமூகத்தை மௌனமாக்கி அதிகாரத்தை வலுப்படுத்தி ஊழல் புரிவது என்பதாக இருந்தது. வடக்கில் அவரது ஆட்சி இராணுவ வன்முறை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தை தொடர்ச்சியாக ஊட்டி தொடர்ச்சியான கண்காணிப்பினுள் மக்களை வைத்திருந்து இராணுவ ஆக்கிரமிப்பைப் பேணுவது என்பதாக இருந்தது.

வாசிங்டன் போஸ்(washingtonpost) இன் “குரங்குக் கூடு(monkey cage)” என்னும் பிரிவில் வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையிற் சொல்லப்பட்டிருந்தது போல 2015 சனவரியில் இராசபக்ச தோற்கடிக்கப்படுவார் என யாரும் நம்பியிருக்கவில்லை. இலங்கைச் சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லீம்களின் உதவியுடனும் மகிந்த அரசில் இருந்து விலகியவர்கள் எதிர்க்கட்சியினர் ஆ இணைந்து உருவாக்கிய சாத்தியமற்ற கூட்டணி எனக் கருதப்படக் கூடிய கூட்டணி ஒன்று இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய கூட்டணி அரசாங்கம் சிறுபான்மையினருக்கு மேலும் இணக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்ற சமிக்கையும் இதன் போது வெளிப்பட்டது.

இரத்தம் நிறைந்த முடிவை அடைந்த போரின் பின்னான சூழலை மகிந்த சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கம் வேறுவிதமாக ஆக்கும் என்ற நம்பிக்கையும் தோன்றியது ஆனாலும் இறந்தவர்கள் எல்லோரையும் (புலிகள் உட்பட) நினைவு கூர்வது என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை.

கடந்த வருடம் முதன்முறையாக யுத்தத்தில் பலியான மக்களை நினைவு கூர அனுமதிக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினரதும் புலனாய்வாளர்களதும் பெருமளவிலான பிரசன்னம் மக்களை இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் இருந்து விலக்கி வைத்திருந்தது. மேலும் வீதி ஊர்வலங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டிருந்தன. இவ்வருடமும் நினைவு நாளை ஒழுங்குபடுத்தும் குழுவினர்கள் தாம் புலனாய்வாளர்களால் தொடரப்பட்டதாகவும் தொல்லைப்படுத்தப்பட்டதாகவும் முறையிட்டுள்ளனர். மேலும் இறந்தவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்திய பலர் தாங்கள் படம்பிடிக்கப்பட்டதாகவும் வீடியோ செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆழமாகப் பிளவுண்டு போயிருக்கும் இனங்கள் சமூகங்கள் வாழும் இலங்கையில் அவற்றுக்கிடையில் நிகழ்ந்த வன்முறையின் வரலாற்றை எப்படிப் புரிவது எப்படிக் கையாள்வது என்பதற்கு இலகுவான விடைகள் இல்லை.சர்வசேதச் சட்டங்களின்படிக்கு யுத்தத்தின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை அறிவதற்கும் நீதியைப் பெறுவதற்கும் உரித்துடையவர்கள். ஆனால் இவர்களுக்கு இவ்வுரிமையைப் பெற்று கொடுப்பதென்பது இலகுவான பணியில்லை.

யுத்தகாலங்களில் எற்படும் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது ஏன் இலகுவாக இருப்பதில்லை என்பதற்கு இலங்கையின் சூழ்நிலை குறிப்பானதொரு உதாரணமாக இருக்கிறது.

போரிலும் உள்நாட்டு யுத்தங்களிலும் ஈடுபட்டிருந்த நாடுகளில் பல சந்தர்பங்களிற் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்த தனிமனிதர்களும் இராணுவத்தினரும் போர் முடிந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னும் கூடத் தொடர்ந்தும் அதிகாரத்தின் படிநிலைகளில் வலுவாக இருப்பதைப் பார்க்கிறோம். (2009 மே காலப்பகுதியில் தற்போதைய இலங்கையின் சனாதிபதி சிரிசேன அவர்கள் மகிந்த அரசாங்கத்தில் பதிற்பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்பதை நாங்கள் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும்.)அரசியல் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இத்தகைய சூழ்நிலையிற் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற முனைவது( குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும் அவர்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த முனைவது) நிலவும் அமைதியைக் குலைக்கும் ஒன்றாக அமையும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மேற்குறித்த வகையான பரிமாணத்தைக் கொண்ட போருக்குப் பின்னனான அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளான சிலே சாட் லிபீரியா தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உண்மையை அறியும் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் இடையில் சமரசத்தை உருவாக்க முனைந்திருக்கின்றன. இதன் போது குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தங்கள் குற்றச் செயலை ஓப்புக்கொள்ளும் பட்சத்தில் தண்டனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் இன்னுமொரு சவாலையும் எதிர்கொள்கிறார்கள். போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதுமட்டுமல்ல இலங்கையின் பெரும்பான்மையான வாக்காளர்கள் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதனை எதிர்க்கவும் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தடையாகவும் இருக்கிறார்கள். எனவே அரசியல்வாதியொருவர் தனது தொகுதி மக்களைத் திருப்திப்படுத்தாத நிலைப்பாட்டை எடுப்பது அவருக்குச் சிக்கலைத்தரும். தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதும் இங்கு அவர்களுக்கான நீதியைப்பெறுவதற்குத் தடையாக இருக்கிறது.இலங்கையின் சனத்தொகையிற் 15%மே தமிழர்கள். இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் இராணுவத்தினரைத் தீவிரவாதிகளைத் தோற்கடித்தவர்களாகப் போற்றுகின்றனர். இராணுவத்தை நீதிவிசாரணைக்குட்படுத்தும் எந்த முயற்சியையும் அவர்கள் தங்களது கதாநாயகர்கள் மீதான தாக்குதலாகவே பார்க்கிறார்கள். எனவே பெரும்பான்மை இன வாக்காளர்களின் நிலைப்பாட்டைப் புறக்கணித்து குறைந்த பட்சம் உண்மையை அறியும் ஒரு செயல்முறையை நிறுவ முனைவது கூடச் சிறிசேன அரசாங்கத்திற்கு ஆபத்தாக முடியலாம். ஏற்கனவே சிறிசேன அரசாங்கத்தின் செல்வாக்குச் சரிந்து வருவதாகவும் தெரிகிறது.

கடந்த ஆகஸ்டில் இடைத்தேர்தல் ஒன்றில் இராசபக்ச பாராமன்றத்துக்கான ஒரு ஆசனத்தை வென்றுள்ளதுடன் அவரை மீண்டும் அதிகாரத்தில் பார்க்க விரும்புகிற மக்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மேற்குறித்த அரசியற் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு இலங்கையை அவதானிப்பவர்களுக்கு இலங்கையின் புதிய ஆட்சியாளர்களால் சர்வதேச சமூகத்துக்கு வாக்களித்தபடி இலங்கையில் நீதியை நிலை நாட்டுவதற்கான மேலான நடவடிக்கைகளை ஏன் எடுக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்காது. உண்மையை அறிதல், இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக ஆணைக்குழுக்களை நிறுவி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான விசாரணைகளை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுத்தல் என்னும் வாக்குறுதியை புதிய ஆட்சியாளர்களால் இன்னமும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ ஒப்புக் கொள்ளப்படாத குற்றங்கள் நீடித்திருப்பது தொடர்ந்தும் காயம் விளைவிப்பதாக இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இறுதித் தாக்குதலில் ஏறத்தாள 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பான குழுக்கள் 100,000 க்கும் மேலானவர்களின் விதி என்னவென்றே தெரியவில்லை என்கின்றனர்.

தெற்கில் இருப்பவர்களுக்கு இக் குற்றங்கள் தூரத்தில் நிகழ்ந்தவையாகவும் மறக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் தமது அன்புக்குரியவர்களை இழந்து அவர்களைக் காணாமல் அவர்கள் பற்றிய தகவல்களைத் தேடும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களுக்கு இது அவர்களது நாளாந்தப் பிரச்சனையாக மறக்கமுடியாததாக இருக்கிறது.

ஆழமாகப் பிளவுண்டு கிடக்கும் இனங்களுக்கு இடையில் மேலான நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தப்படுமானால் அது தொடர்பாக குறைத்து மதிப்பிடப்படுமென்றால் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு இறுக்கங்கள் தடைகள் இருக்குமென்றால் அது இப்போது முற்றிலும் வித்தியாசமான ஒரு செய்தியைச் சொல்கிறது.அச் செய்தியென்னவென்றால் உண்மையில் இலங்கையில் மாற்றம் எதுவும் நிகழவில்லை என்பதுதான். உண்மையான பிரச்சினை என்னவென்றால் நிலைமாற்றம் அடைந்த இலங்கையில் நீதி தோன்றவில்லையே என்பதல்ல இலங்கையில் நிலைமாற்றமே தோன்றவில்லை என்பதுதான்.

ஆங்கிலத்தில்: கேற் குறோனின் பேர்மென்

மனித உரிமைகளுக்கான சட்டத்தரணி

அரசியல் ஆய்வாளர்

கலாநிதி பட்டப் பின் படிப்பு உதவியாளர்

ஸரான்போர்ட் பல்கலைக்கழகம்

Kate Cronin-Furman (@kcroninfurman) is a human rights lawyer, political scientist and postdoctoral fellow at Stanford University.

தமிழ் மொழிபெயர்ப்பு : தேவ அபிரா

https://www.washingtonpost.com/news/monkey-cage/wp/2016/05/18/sri-lankas-bloody-civil-war-finally-ended-seven-years-ago-but-moving-on-from-the-past-is-not-easy/

Comments
Loading...