தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: மத்திய அரசுக்கு தி.மு.க வலியுறுத்தல்

clip_image002_thumb1இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.

மேலும், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம், மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னையில் இன்று (ஞாயிற்றுகிழமை) திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

* தென் ஆப்பிரிக்க முன்னால் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு இரங்கல்.

* ‘நெஞ்சுக்கு நீதி’ ஆறாம் பாகத்தை எழுதிய திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு.

மீனவர் பிரச்சினை

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையில் காலதாமதம் செய்து வருகிறது.

எனவே, நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக வலியுறுத்துகிறது.

சேது சமுத்திர திட்டம்

* உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட வேண்டும் என மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறத

* தி.மு.க. அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்தால் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா அரசு, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்காமல் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஜெயலலிதா அரசின் இந்தப் போக்கினை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

* நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் “இந்திய வான்வெளி – திரவ எரிவாயு மையம்” மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் “இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்” அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். எனவே இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது.

13வது சட்டத் திருத்தத்தின்படி நில நிர்வாகம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை நிர்வாகம் அனைத்தும் இராஜபக்சே அரசின் கையில் உள்ளது. மாகாணக் கவுன்சிலைக் கூட்டுவதும், கலைப்பதும் ராஜபக்சே அரசின் மாகாண ஆளுநரின் கைகளில் உள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும் ராஜபக்சேக்கும்தான் உள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் “பொது வாக்கெடுப்பு” நடத்தவும்; தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஐ-நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிடவும் வலியுறுத்துவதோடு, இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது சட்டத் திருத்தம் அமைந்திட இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிடவாவது இந்திய அரசு முன்வர வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments
Loading...