Designed by Iniyas LTD
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ், சிங்கள மக்களிடமிருந்து அந்நியப்படுகின்றனர் : சிவசக்தி ஆனந்தன்
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ், சிங்கள மக்களுடன் இணைந்து வாழாமல் அந்நியப்படும் நிலை உருவாகிவருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதற்கான பொறுப்புகளை அவர்களது அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார். கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கல்முனை வடக்கில் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ நாம் தயாரில்லை என்பதே அங்கு இடம்பெற்ற முஸ்லிம்களின் சத்தியாக்கிரகப்போராட்டம் சொல்கின்ற செய்தி. இவ்வாறு இணைந்து வாழ முடியாவிடின் எவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சேர்ந்து வாழ்வார்கள்? நல்லிணக்கம் எப்படி வரும்? வெறும் உதட்டளவில் நல்லிணக்கம் நல்லுறவு பற்றிப்பேசுவதில் பயனில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்களை ஒதுக்கிவருகிறார்கள். அவர்களோடு இணைந்துவாழ பயப்படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்துவாழவும் இவர்கள் விரும்பவில்லை. மொத்தத்தில் நாட்டில் தமிழ் சிங்கள மக்களோடு இணைந்துவாழ அவர்கள் தயாரில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவருகிறார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அந்த அரசியல்வாதிகளின் வழிகாட்டலினால் அவர்கள் அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றார்கள் என்றே சொல்லவேண்டியுள்ளது.
எனவே அவர்கள் பிரதேச செயலகம் தனியான கல்வி வலயம் எதனையும் நிலத்தொடர்பற்ற ரீதியில் செய்துகொள்ளலாம். ஆனால் தமிழ் மக்கள் கோருகின்ற சிறு அதிகாரத்தை வழங்குவதற்கு தடைபோடுகிறார்கள். இது நியாயமா? இதனைதிட்டமிட்டு தடைபோட்டு வருகிறார்கள். இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல, இன உறவுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.