தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் காரணமாக, தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் என்றும், அதன்பிறகே, இங்கேயுள்ள இலங்கை அகதிகள், தாயகம் திரும்புவது பற்றி சிந்திக்க முடியும் எனவும் தனது அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை, தாயகத்துக்குத் திருப்பி அனுப்பும் விவகாரம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அகதிகளை தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு கூட்டிய கூட்டத்தில், தமிழக அரசு பங்கேற்காதது பற்றி கருணாநிதி தெரிவித்திருந்தார். அதில், இலங்கை அகதிகள் தாயகம் சென்றால் அவர்களுக்கு அமைதியான வாழ்வு ஏற்படுமா அல்லது முன்பு போலவே கொடுமை தொடருமா என்றே தெரியாத நிலையில், மத்திய அரசு இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் எவரும் கலந்து கொள்ளாதது சரியான நிலைப்பாடுதான் என்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்த 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேரில், 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் ஏற்கெனவே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். எனவே, இப்போது தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் சொந்த விருப்பத்தின் பேரில் அங்கு திரும்புவதற்காக ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது எதற்கான கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும்.pannerselvam-ops

சரியான முடிவுதான்: இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசின் நல்லிணக்கம், மறுகுடியமர்த்தல் ஆகிய நல்லெண்ணங்கள் செயலாக்கப்பட்டதற்குப் பிறகே, தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு எப்படி பொறுப்பற்ற செயலாக இருக்க முடியும். இங்கேயுள்ள இலங்கை அகதிகளின் மீது தமிழக அரசுக்குள்ள பொறுப்பின் காரணமாகத்தான் இதுபோன்ற ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவில், இலங்கை அகதிகள் தமிழகத்தில் நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தீர்மானத்தின்படி, மத்திய அரசுக்கு, தான் கடிதம் எழுதியதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய அரசிலே கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அங்கம் வகித்த அவர், இதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்.

திமுகவால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானமும், அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு கருணாநிதி எழுதிய கடிதமும் ஒரு நாடகம்தானே. தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை கருணாநிதி எப்போது மாற்றிக் கொண்டார். இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற முடிவை எப்போது எடுத்தார் என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும் என தனது அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...