தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை அகதிகள் முகாமிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்..?

சிங்கள பவுத்த பேரினவாதத்தின் அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் அஞ்சி தமிழகத்தில் ஏதிலிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் ஏராளம். அதை தாண்டி இந்திய அரசின்  கண்காணிப்பு பணி என்ற பெயரில் நடை பெறும் அச்சுறுத்தலில் இதுவும் ஒன்று.
தமிழகம் முழுவதும் இலங்கை அகதிகள் முகாம்கள் வழியாக தீவிரவாதிகள், நக்சல்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு போர் மூண்ட நேரத்தில் அங்கிருந்து சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் அகதிகள் தமிழகத்திற்கு சென்றனர்.
இதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தவுடன், தமிழகத்தில் இருந்த 30 ஆயிரம் அகதிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக்கு திரும்பி சென்றனர்.
மீதமுள்ள 95 ஆயிரம் இலங்கை அகதிகள் அந்தந்த முகாம்களில் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள், அரசின் அனுமதி பெறாமல் உறவினர்களை தங்களுடன் தங்கவைத்தனர்.
அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் தங்கி நாசகார செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக, இந்திய மத்திய புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு, இலங்கை அகதிகள் முகாம்களை கண்காணிக்க இரகசிய உத்தரவிட்டது.
அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் இதற்கென ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது.
அவர்கள் முகாம்களிலுள்ள இலங்கை அகதிகள் குறித்த விவரங்களை வாரம் தோறும் சேகரித்து மாவட்ட எஸ்பி மற்றும் சென்னை தலைமையிட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
எஸ்பி அலுவலகத்தில் உள்ள இந்த பிரிவில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து தினமும் அல்லது அவர்கள் விரும்பும் நாட்களில் தங்களது அடையாள அட்டை ஒரிஜினலை நேரில் காண்பித்து, நகல் ஒன்றை அளித்து கையெழுத்து அல்லது விரல் ரேகை பதிவு செய்து தங்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இலங்கை அகதிகள் போர்வையில் வெளிநாடு, உள் நாட்டு தீவிரவாதிகள், நக்சல்கள் யாரேனும் தங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த விவரங்களை சேகரிப்பதும், சோதனையிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.
இது நம் நாட்டு மக்கள் மற்றும் இலங்கை அகதிகளின் நலனுக்காகவே செய்யப்படுகிறது’ என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து இலங்கை கடற்பகுதிக்கு சென்ற படகை இலங்கை கடற்படையினர் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 29 அகதிகள் இருந்தது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி தூத்துக்குடியிலிருந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு வந்துள்ளனர்.
மியான்மர் அகதிகள் என்பதால் அங்குள்ளவர்களில் சிலர் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர். பின்பு இவர்கள் அனைவரும் இலங்கைக்கு செல்ல முயன்ற போது இலங்கை கடற்படையினரிடம் சிக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...