தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை தமிழர் விடயத்தில் நல்லிணக்கம் எட்டப்பட வேண்டும் – இந்தியா

இலங்கை தமிழர் விடயத்தில் நல்லிணக்கம் எட்டப்பட வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவது குறித்து, இந்திய-சிறிலங்கா அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.

போரினால், இடம்பெயர்ந்த தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து, புதுடெல்லியில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.mangala-sushma

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களிலே, அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்துப் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்கு முன்னதாக, இதுபற்றிய பேச்சுக்களை இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஆரம்பிப்பர் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர்.

இவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர் முகாம்களிலும், ஏனையோர் தனியான வீடுகளிலும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று சந்தித்துப் பேசிய போதே இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், மற்றும் சீன நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளன. இதேவேளை சுஸ்மா விரைவில் இலங்கைக்கும் அதேநேரம் சீனாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

Comments
Loading...