Designed by Iniyas LTD
இலங்கை தொடர்பில் புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹூசேன்!
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இம்முறை இலங்கை நிலைமை பாரிய சூடுபிடிக்கும் நிலையில்காணப்படுகின்ற சூழலில் பல்வேறு தரப்பினரும் இலங்கை விவகாரம் குறித்து அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவா கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளது.
இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனிவாப் பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதமும் நடைபெறவுள்ளது. மேலும் 14 க்கும் மேற்பட்ட உபகுழுக்கூட்டங்களும் ஜெனிவா வளாகத்தில் இம்முறை கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளன.
இதேவேளை இம்முறை இலங்கை விவகாரம் தொடர்பில் பல்முனை பிரசாரங்கள் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளன. இலங்கை விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் ஜெனிவா வளாகத்தில் நடைபெறவுள்ள உப நிகழ்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் பிரதிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் வலியுறுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பிரதிநிதிகளை ஜெனிவாவுக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தவுள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட ஐந்துபேரைக் கொண்ட குழு கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவா நோக்கி செல்லவுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார். இது தொடர்பில் கருத்து வெ ளியிட்டுள்ள சிறிதரன் எம்.பி. இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் எனவே இம்முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பாக எடுத்துரைப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் ஜெனிவா வளாகத்தில் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இது இவ்வாறிருக்க வழமைபோன்று இம்முறையும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளனர். குறிப்பாக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தமக்கான நீதி தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் ஜெனிவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறவுள்ளனர்.
இதேவேளை வடமாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரனும் வழமைபோன்று இம்முறையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு காணாமல் போன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரச சார்பற்ற மக்கள் பிரதிநிதிகள் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன் சர்வதேச ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இது இவ்வாறிருக்க தென்னிலங்கையின் எலிய அமைப்பின் பிரதிநிதியான முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு பிரசாரம் செய்யவிருக்கிறார். அதாவது இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் செயிட் அல் ஹுசைன் கூறுகின்ற அனைத்தையும் அரசாங்கம் கேட்பதாகவும் அவர் ஜெனிவாவில் எடுத்துக்கூறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அதாவது போர்க்குற்றங்களை நிராகரிக்கும் எமது நிலைப்பாட்டை இம்முறையும் ஜெனிவாவில் தெரிவிப்போம் என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கத் தரப்பு தாம் எவ்வாறு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதுடன் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபகுழுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தவுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு ஜெனிவா செல்லவுள்ளது. அதேபோன்று வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர்.
இந்நிலையில் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை 2015 ஆம் ஆண்டு பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்தே அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.
அதில் இலங்கை மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை முன்னெடுத்து வருகின்ற வகிபாகம் மீண்டும் தொடரவேண்டும். 2017 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தும் செயற்பாடு கடந்த ஒரு வருடகாலமாக தேங்கிக்கிடக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு அரசியல் ஒத்துழைப்பு கிடைக்காத நிலைமை இலங்கையில் காணப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்பன முன்னெடுக்கப்படாமையே காணப்படுகின்றன என்றும் செய்ட் அல் ஹுசைன் குறிப்பிட்டிருக்கின்றார்.
அந்தவகையில் எச்சரிக்கை கலந்த அதிருப்தியை மறைமுகமாக செய்ட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதாவது நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அதிருப்தியையே செய்ட் அல் ஹுசேன் வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கமானது நான்கு காரணிகளின் அடிப்படையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்தது. உண்மையை கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துதல் போன்ற நான்கு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தது. ஆனால் இந்த நான்கு காரணிகளில் எந்த விடயமுமே இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.
தற்போது உண்மையை கண்டறிதல் என்ற விடயத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெனிவாவிலிருந்து கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த அலுவலகத்துக்கான ஆணையாளர்களை நியமித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் மேலும் ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மொஹந்தி அண்டொனட் பீரிஸ், கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹிம், சோமசிரிகே லியனகே, கணபதிப் பிள்ளை வேந்தன் ஆகியோர் இவ்வாறு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம் மூன்று வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்தக் காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்காக 130 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அவர்களின் நிலைமைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பு இந்த அலுவலகத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்தவகையில் தற்போது கடும் தாமதமானாலும் இதன்மூலம் காணாமல் போன தமது உறவுகளுக்கு விடை கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்காமல் இந்த அலுவலகத்தை செயற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் பாரிய விரக்தியுடன் இருக்கின்றனர். நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இதுவரை விடிவு கிடைத்ததாக இல்லை. இந்நிலையில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்றது. அதில் சர்வதேசமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்துகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கூட்டத்தொடர்களில் பங்கேற்று தமக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோருகின்றனர். ஆனால் நிலைமை அவ்வாறே நீடிக்கின்றது.
எனவே இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுகின்றது. இலங்கை மனித உரிமை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் என்ன சொல்லப்போகின்றன? என்ற விடயமும் பேசுபொருளாகியுள்ளன. அதாவது இலங்கை விவகாரத்தில் ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள செய்ட் அல் ஹுசேன் இம்முறை ஏதாவது புதிய பொறிமுறையை வலியுறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை விடயத்தில் மாற்று வழிகளை ஆராயுமாறு செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்பதனை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இம்முறை புதிய கோரிக்கை அல்லது புதிய மாற்று வழி போன்ற ஏதாவது அணுகு முறையை செய்ட் அல் ஹுசேன் முன்வைப்பாரா என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 21 ஆம் திகதி செய்ட் அல் ஹுசேன் என்ன கூறப்போகின்றார் என்று பார்ப்போம்.
