தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இளைஞர்களுக்கு அஞ்சிய அருளினியன் இரகசியமாக விடுதியில் நூலை வெளியிட்டார்

தமிழர் தாயகத்தில், தமிழ் மக்களிடையே கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்த கேரள டயறி என்ற நூல் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நூலை வெளியிடுவதற்கு யாழ்.இந்துக் கல்லூரி நிர்வாகம் மண்டபத்தை வழங்க மறுத்திருந்த நிலையில் திடீர் ஏற்பாடு ஒன்றின் பேரில் விடுதியில் இந்த நூலை வெளியிட வேண்டிய நிலை நூலாசிரியர் அருளினியன் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்தி ஆனந்த விகடனில் கட்டுரை ஒன்றை வெளியிட்ட அருளினியன், தற்போது யாழ்ப்பாணத்தில் மீண்டும் சாதிப்பாகுபாட்டைத் தூண்டும் வகையிலான கேரள டயறி என்ற நூலை எழுதியுள்ளார்.

தமிழ் மக்களிடையே பிரிவினைகளைத் தோற்றுவித்து, அதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முனையும் குழுவினருடன் அருளினியனும் இணைந்துகொண்டுள்ளமை அனைவராலும் உணரப்பட்டுள்ளது.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் அருளினியன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பெண் புலிகளைக் கொச்சைப்படுத்தும் கட்டுரை ஆனந்த விகடனின் திட்டமிட்ட சதி என்று கூறி அதில் இருந்து தப்பிக்க முயன்றார். அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாகவும் கூறினார்.

ஆனால், இன்று இரகசியமாக நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டில் பேசிய அவர், தான் எதையும் எழுதுவார் என்றும் அது தொடர்பாக யாரும் தனக்கு நிபந்தனை போட முடியாது என்றும் குமுறியிருக்கின்றார்.

இளைஞர்களின் படு மோசமான எதிர்ப்புக்களுக்கு அஞ்சி, மிகவும் இரகசியமான முறையில் கேரள டயறியை வெளியிட்ட அவர், அந்த நூலில் இரண்டாம் பாகத்தை விரைவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடுவார் எனவும் கூறியிருக்கின்றார்.

இதேவேளை, அருளினியன் போன்ற கபடத்தனம் செய்யும் நபர்களுக்கு தமிழர் தாயகத்தில் இடமில்லை எனவும் அவர் அடுத்து நூலை முடிந்தால் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் காட்டட்டும் எனவும் இளைஞர்கள் சவால் விடுத்துள்ளனர்.

Comments
Loading...