Designed by Iniyas LTD
ஈகப்பேரொளியின் நினைவுநாளில் விடுதலைச்சுடர் பயணம் – 9ஆம் நாள்
“என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்தத் தவறிய உலகமே! உங்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகிறேன்” என ஐக்கிய நாடுகள் அவை முன்பாகத் தன் இன்னுயிரீந்த ஈகப்பேரொளி முருகதாசனின் ஆறாம் ஆண்டு நினைவுநாளான பெப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் வியாழக்கிழமை ஒன்பதாவது நாளாக விடுதலைச்சுடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தென்மேற்கு லண்டன் Morden இல் காலை 10 மணிக்கு 9ஆம் நாள் விடுதலைச்சுடர் போராட்டம் ஆரம்பமானது. சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் (தமிழீழத்திலும்) தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஐ நா நோக்கி முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் போது, விடுதலைச்சுடரினை திரு ஆனந்தராசா கஜீபன் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியினை திரு பொன்னுத்துரை செல்வரஞ்சன் அவர்களும் தங்கள் கைகளில் ஏந்தியவாறு கொண்டு சென்றனர். பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களுடன் குமார், ரஞ்சன், ஜானு அரவிந்தன், வாகீசன், மதியழகன், தாசன் ஆகியோரும் ஒன்றுகூடிச் சென்று 9ஆம் நாள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
Morden இல் ஆரம்பமான சுடரேந்திய பயணமானது, Rosehill, Sutton, Cheam, North Cheam ஆகிய இடங்களின் பல முதன்மைச் சாலைகள் வழியே சென்று Carshalton பகுதியை அடைந்தது. இதன்போது Mitcham, Morden ஆகிய இடங்களுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் Siobhain Ann McDonagh அவர்களிடமும் Sutton and Cheam பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு Paul Burstow அவர்களிடமும் Carshalton, Wallington ஆகிய இடங்களுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு Tom Brake அவர்களிடமும் மனுக்கள் கையளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்ட சுடர்ப்பயணம் Carshalton இலிருந்து மீண்டும் ஆரம்பமானது.
Wallington, Croydon ஆகிய இடங்களின் முதன்மைச் சாலைகள் வழியே நடந்து சென்ற போராட்ட முன்னெடுப்பாளர்கள் ஆங்காங்கே சந்தித்த மக்களிடம் சிறுவெளியீடுகளைக் கொடுத்தவாறே London Road , Thornton Heath Pond, Brigstock Road ஆகிய சாலைகள் ஊடாகச் சென்று Thornton Heath என்னுமிடத்தில் ஒன்பதாம் நாள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
உலக அமைதியையும் பாதுகாப்பையும் பேணுதல், மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தல் போன்ற பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அவை முன்பாக ஈழத்தமிழினம் சிறீலங்கா அரசபயங்கரவாதத்தால் கருவறுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரித் தன்னுடலைத் தீயிலே உருக்கி, இன்னுயிரீந்து, பேரொளியாகிய முருகதாசன் வர்ணகுலசிங்கம் மூட்டிய தீயைக் கைகளில் ஏந்தி முன்னெடுக்கப்படும் போராட்டம் ஈகப்பேரொளி உயிரீந்த அதே ஐ நா திடலை மார்ச் திங்கள் 16ஆம் நாள் சென்றடையவுள்ளது.
