தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் பண இசை நிகழ்ச்சி தேவையா?

14590412_1653591108266233_540805478898206281_n

நேற்று யாழ்ப்பாண நகரில் பேருந்தில் ஏறி துரையப்பா விளையாட்டரங்கை கடந்து வந்தேன். பிரமாண்டமான மேடை. மூடப்பட்ட வளாகம். ஏ-9 வீதி எங்கும் விளம்பரப் பதாகைகள்தான். இந்தியப் பாடகர்களான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடே இப்படியுள்ளது. அங்கு காணப்படும் ஒவ்வொரு விளம்பரப் பதாகையும் எங்கள் சனங்களின் காசை எப்படிப் பிடுங்கலாம் என்றபடி முகத்தை வைத்திருந்தன.

நேற்று யாழ் நகரத்தில் ஒரு நண்பனை சந்தித்தேன். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சியைப் பார்க்க ஆசை என்றும் தன்னிடம் 1000 ரூபா மாத்திரமே உள்ளது என்றும் அவன் கூறினான். ஒருவருக்கு 250 ரூபா என்றால் வீட்டில் உள்ள அனைவரும் சென்று பார்க்கலாம் என்றான். பின்னர் இந்த 1000 ரூபாவை வைத்திருந்தால் இரண்டு நாளுக்கு வீட்டுப் பொழுதை போக்கலாம் என்றான். அவன் யாழ்ப்பாணத்தின் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.

குறித்த இசை நிகழ்ச்சிக்கு 1000 ரூபாவிலிருந்து 10ஆயிரம் ரூபா வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முன் வரிசையில் இருக்க 10 ஆயிரம் ரூபா. வளாகம் நிறைந்த சனங்கள். கடந்த பல நாட்களாக சமூக வலைத்தளம், இணையங்கள், பத்திரிகைகள் மாத்திரமின்றி வடகிழக்கில் உள்ள வங்கிககளிலும் தெருக்களிலும் பதாகைகள் வைக்கப்பட்டு அனுமதிச் சீட்டு மும்மரமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கு அனுசரனை வழங்கிய வர்த்தநிலையங்கள், நிறுவனங்களும் தாராளமாக பணத்தை குவித்தன.

ஈழத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி, கங்கை அமரன் போன்ற குரல்களின் ரசிகர்களே. ஆனால், ஒன்று, மிகவும் நெருக்கடியான காலத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி தேவையா? இரண்டு, இவ்வளவு பணத்தை அள்ளிச் செல்வதா? அனைவருக்கும் இவர்கள் பாடுவதை ரசிக்கும் விருப்பம் உண்டு. ஆனால் இவ்வளவு பணத்தை வசூலித்து, பல்வேறு நிறுவனங்களின் பணப்பெட்டிகளை நிறைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவது நியாயமானதா? போரால் நொந்து, பொருளாதாரத்தை இழந்த ஈழத் தமிழ் மக்களிடம் இப்படி பணத்தை அள்ளிச் செல்வது எவ்வளவு கொடுமையானது?

இன்றைக்கு ஈழத்தின் வன்னியிலும் கிழக்கிலும் பட்டினியால் எத்தனை குழந்தைகள் வாடுகின்றன. போரில் தாயை இழந்து, தந்தையை இழந்து, ஆதரவின்றி அனாதரவாக எத்தனை குழந்தைகள் உள்ளனர். இன்றைக்கும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் தமிழக மக்கள் பலர் பசியுடன் உள்ள குழந்தைகளுக்கு உதவுகின்றனர். அங்கிருந்து நிதியைப் பெற்று இங்குள்ள குழந்தைகளின் பசியை நாம் போக்க, இங்குள்ள நிதியை கொள்ளையடிப்பதை என்னவென்பது?

இன்று ஈழத்தில் இந்தியப் படைகள் ஊழித் தாண்டவம் ஆடிய நாள். இன்று முதல் பெண் மாவீரர் மாலதி வீரமரணம் எய்திய நாள். இந்தியப் படைகள் ஈழத்தில் ஊழித் தாண்டவம் ஆடிய நாட்களில் இந்திய தூதரகத்தின் அனுசரனையுடன் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இசை நிகழ்ச்சி. இந்தியாவுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் அவர்களின் நினைவுநாளில் இந்திய தூதரகம் அகிம்சை தினம் நடத்துவதுபோலவும், கம்பன் கழகத்தை வைத்து கம்பன் விழா நடத்துவதுபோலவும் திட்டமிட்ட நிகழ்ச்சியே இது.

நிகழ்ச்சியை நடத்துவது ஈழத் தமிழர்கள்தான் என்று கங்கை அமரன் தமிழகத்தில் கூறியுள்ளார். நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு. ஸ்ரீலங்கா அரசின் தொலைபேசி சேவையே பிரதான அனுசரனை மற்றும் ஏற்பாடு. அதனை உறுதி செய்யும் சிட்டை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

14600900_10154207979553143_3592098001362747511_n

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இச் சேவையின் மகுட வாசகமாக “ஒரே நாடு! ஒரே குரல்” என்பதாக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மாற்றினார். இதனால் தமிழர்கள் மத்தியில் வெறுப்பு மிக்க அரச சேவையாகவும் இது நோக்கப்படுகிறது.

ஈழக் குழந்தைகள் பட்டினியில் வாட, பணத்தை வாரியிறைக்கும் இத்தகைய இசை நிகழ்ச்சிகளில் திரளும் உங்களை உங்களுக்காய் போராடி மாண்ட மாவீரர்களின் ஆத்மா மன்னிக்காது. அவர்கள் எல்லாவற்றையும் துறந்து உங்கள் உரிமைக்காக, உங்கள் விடுதலைக்காக கனவு சுமந்து தங்களை மாய்த்தார்கள். முன்னாள் போராளிகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் துன்பங்களை அனுபவித்தக்கொண்டிருக்கும் நிலையில் இப்படிக் காசை கொட்டிக் களியாட்டம் செய்வது விடுதலைப் போராட்டத்திற்கு செய்யும் அநீதியாகும்.

இந்திய அரசுக்கு ஈழத் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் தன் போர்க்குற்றங்களை மறைக்கும் அவசியம் உள்ளதுபோல ஸ்ரீலங்கா அரசுக்கு ஈழத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்கள் பாட்டும் கூத்தும் சந்தோசமுமாய் உள்ளனர் என்று காட்ட இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. எத்தனை இழந்து, இத்தனை துயரங்களை கடந்து, இத்தினை தியாகங்களை புரிந்து போராடிய, இன்றும் போராடும் எங்கள் மக்கள் மத்தியில் இந்த அரசியலை புரிந்து கொள்ளாத சிலரால் ஒட்டுமொத்த போராட்டத்திற்கும் களங்கம் விளைவிக்கப்படுகிறது.

தமிழவன்,
செண்பகம்.
10.10.2016

Comments
Loading...