Designed by Iniyas LTD
”ஈழத்துக்காவியம்” நான் இறப்பதுக்குள் எழுதுவேன்!
ஈழத்தமிழர்களின் துயரத்தையும், வீரத்தை யும் மகா காவியமாக எழுதுவேன். அதனை உலகெங்கும் எடுத்துச் செல்வேன். அதுவே என் வாழ்நாள் திட் டம் என்பதை இந்த மண்ணில் இருந்து தெரிவிக்க விரும்புகிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து முல்லைத்தீவில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நேற்று முன்தினம் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்
இந்த நிகழ்வு ஆரம்பிக்கின்ற போது இந்த விழாவை தொகுத்து வழங்கிய நண்பர் அடிக்கடி வானத்தை பார்த்தார் வானம் முணுமுணுக்கிறதை பார்க்கிற போதெல்லாம் அவருக்கு ஒரு அச்சம் மேலிட்டது இங்கே வானத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுமோ!, இந்த மண் நனைந்து விடுமோ!, அந்த வலியில் எங்கள் தமிழர்கள் கரைந்துவிடுவார்களோ!, அல்லது கூட்டம் கலைந்துவிடுமோ!? என்ற அச்சத்தின் காரணமாக அல்லது ஆர்வத்தின் காரணமாக மழையே வழிவிடு வர்ணபகவானே அருள்புரி என்றெல்லாம் வானத்திற்கு கோரிக்கை விடுத்தார்
நான் நினைத்துக்கொண்டேன் வெடி மழையிலேயே கரைந்து போகாத எங்கள் தமிழர்க்ள இந்த இடி மழையிலா கரைந்து போகப்போகிறார்கள்?
இந்த மண்ணின் மக்களே! தமிழ் பெரு மக்களே! என் இரத்த உறவுகளே! உங்களையெல்லாம் பார்க்கின்றபோது என் தோள்கள் விரிந்து நிற்கின்றேன்,என் மார்பு அகழமாகிறது உங்கள் கண்ணீரில்,உங்கள் இரத்தத்தில் உங்கள் வியர்வையில் உங்கள் துயரத்தில் அழுதுகொண்டிருந்த ஒரு ஆண்மா இன்று உங்கள் முன்னால் வந்து பேசிக்கொண்டிருக்கிறது உங்களை நலம் விசாரிக்க வந்தேன் உங்கள் கைகளை தொட்டுப் பார்க்க வந்தேன் உங்கள் கண்களில் நம்பிகை வெளிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வந்தேன் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் உங்கள அன்பை பகிர்ந்துகொள்ள வந்தேன் வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்ற நம்பிக்கையை உங்களுக்கு விதைக்க வந்தேன்
நான் இப்போதுதான் முதன்முதலாக இந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன் இந்த மண்ணை தொட்டு வணங்குகிற போது எனக்கு என்ன உணர்வு வந்தது என்பதை ஆயிரம் சொற்களால் எழுதிகாட்ட முடியாது. முதன் முதல் மண்ணில் விழுகிறபோது மழைத்துளிக்கு ஒரு சிலிர்ப்பு வருமே மண்ணுக்கு ஒரு உயிர்ப்பு வருமே அந்தச் சிலிர்ப்பு அந்த உயிர்ப்பு. முதல் முத்தம் பெறுகிற போது உயிருக்குள் ஒரு பூ பூக்குமே அப்படி ஒரு சிலிர்ப்பு முதல் இரத்தம் குழந்தைககு வலிகிற போது தாயின் இதயம் துடிக்குமே அந்த துடிப்பு இவைகளையெல்லாம் இந்த மண்ணை தொட்டுப் பார்கின்ற போது என் உடம்பு உணர்ந்தது. என் உள்ளம் உணர்ந்தது என் முளை உணர்ந்தது என் தமிழ் உணர்ந்தது காரணம் உங்கள் பாதி நாங்கள் எங்கள் பாதி நீங்கள்.
வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல ஊர் பெயர்கள் எல்லாம் வெறும் ஊர் பெயர்கள் அல்ல வவுனியா, கிளிநொச்சி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வல்வெட்டித்துறை என்ற பெயர்களை; உச்சரிக்கின்ற போது இவை ஊர் பெயர்கள் அல்ல சரித்திரத்தின் தெருக் குறிப்புகள் என்ற உண்மையை இந்த உலகம உணர்ந்திருக்கிறது.
உலக இனத்திற்கெல்லாம் தமிழர்களின் முகவரியை எழுதிக் காட்டிய இலங்கைத் தழிழர்களின் மண்ணில் நிற்கிறேன். சான்றோரும் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று எழுதிய இலங்கைப் புலவர் சச்சிதானந்தனின் மண்ணில் நிற்கிறேன்.
முதல் மரியாதை திரைப்படத்தில் ஒரு பாடல் வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம் என்ற வரி இந்த வரிக்குப் பெருமை தந்தவர் வைரமுத்து,விருது பெற்றவர் வைரமுத்து கைத்தட்டல் பெற்றவர் வைரமுத்து ஆனால் அந்த விருது, அந்த பெருமை, அந்த கைதட்டல், அந்த இலக்கிய மேன்மை, எல்லாம் யாரைச் சென்று சேர வேண்டுமா தோழர்களே இலங்கை தோட்டத் தொழிலாளிகளை சேர வேண்டிய வரிகள் வெட்டிவேரு வாசம் வெடல புள்ள நேசம் இந்த வரியை ஈழத்தின் மலையக தோட்டத் தொழிலாளிகளின் பாட்டுத் தொகுப்பில்தான் நான் முதன் முதலில் பார்க்கிறேன். எனவே அந்த வெற்றியை அந்தப் பெருமையை அந்த மண்ணுக்கும் அந்த தொழிலாளிகளுக்கும் நான் காணிக்கைச் செலுத்த வந்திருக்கிறேன்.
ஈழத்து மண்ணின் பெரும் கதையை ஒரு மகா காவியமாக ஆக்குதுதான் வைரமுத்துவின் வாழ்நாள் திட்டம் என்பதை நான் இந்த மண்ணில் இருந்து தெரிவிக்க விருபுகிறேன். எழுதுவேன் என் விரல்கள் எனக்கு சம்மதிக்கும் காலம் வரை, எழுதுவேன் தமிழ் எனக்கு துணை இருக்கும் காலம் வரை. எழுதுவேன் என் நெஞ்சில் ஈரம் இருக்கும் காலம் வரை. தமிழர்களின் கண்ணீர் மாற்றப்படும் காலம் வரை. எனத் தெரிவித்தார்.