Designed by Iniyas LTD
ஈழப்போராட்டம் தமிழ் பேசும் மக்களுக்காகவே என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் – பிரபாகரன்
ஈழ விடுதலைப்போராட்டம் அனைத்து தமிழர்களுக்காகவுமே முன்னெடுக்கப்பட்டதென்பதை முஸ்லிம்கள் கருத்திற்கொள்ள வேண்டுமென ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினை தற்போது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு சில இஸ்லாமிய அடிவருடிகள்தான் தடையாக உள்ளனர். அவர்களே அரசாங்கத்தினைக்கொண்டு தடைசெய்து வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து வாதிடுவதற்கான அனைத்து அதிகாரமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராமுகமாக இருக்கின்றது. முஸ்லிம் பிரதேசங்களுக்கு தேவையான நிர்வாக அலகுகளை வழங்கும்போது தமிழ் மக்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் அனைத்து இனமக்களும் ஒன்றாக வாழவே விரும்புகின்றோம். மேலும் ஈழ விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் தனியாக தமிழர்களுக்கான போராட்டமாக மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு, மலையம் என தமிழ் பேசும் மக்கள் அனைவருக்காகவுமே முன்னெடுக்கப்பட்டுவந்தது. இதனை முஸ்லிம் மக்கள் கருத்திற்கொள்ளவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.