Designed by Iniyas LTD
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஞானதேசிகன் ராஜினாமாவை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பி.எஸ்.ஞானதேசிகன் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுகரசர் சுதர்சன நாச்சியப்பன் செல்லக்குமார் ஆகியோரில் ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்கள் 3 பேருமே வாசனுக்கு எதிரான அணியை சேர்ந்தவர்கள்.
ஆனால் காங்கிரஸ் தலைமை திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைவராக நேற்று காலை அறிவித்தது. இளங்கோவனை தலைவராக நியமிக்கும் உத்தரவை கட்சி தலைவர் சோனியாகாந்தி பிறப்பித்ததாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் இளங்கோவன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.
அங்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாசே ராஜேஷ் தலைமையிலான இளைஞர் அணியினர் அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சோனியா ராகுல் இளங்கோவனை வாழ்த்தி கோஷமிட்டனர்.
மாநில தலைவர் அறைக்கு சென்ற அவரை வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் மற்றும் மயிலை அசோக்குமார் ரஞ்சன் குமார் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமித்து அறிவித்திருக்கிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணை தலைவர் ராகுல் காந்திக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னுடைய கட்சி பணிகள் செயல்பாடுகள் இருக்கும். நான் எப்போதும் போலத்தான் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் என்னை தலைவராக நியமித்த தகவல் எனக்கு கிடைத்தது.
ஞானதேசிகனை சந்தித்து பதவியேற்பது குறித்து கலந்தாலோசிப்பேன். அதன்பின்னர் (இன்று) முறைப்படி பதவி ஏற்க உள்ளேன். காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் வாசன் குமரி அனந்தன் தங்கபாலு கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற உள்ளேன். இவ்வாறு இளங்கோவன் கூறினார். இளங்கோவன் ஏற்கனவே 2000-02ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்தபோதுதான் காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை ஜி.கே.வாசன் இணைத்தார். இதையடுத்து தமிழக காங்கிரசுக்கு சோ.பாலகிருஷ்ணன் தலைவராகவும் இளங்கோவன் செயல் தலைவராகவும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.