தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தேமுதிக உறுப்பினர்கள் போராட்டம்

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அணை மீது ஏறி போராட்டம் நடத்த முயன்ற மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக உறுப்பினர் உள்பட 320 பேரை போலீஸார் கைது செய்தனர்.  dmdk

வெள்ளப்பெருக்கு காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அணை இருந்தும், அந்தப் பகுதி விவசாயிகளின் பாசனத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில்லை. உபரியாக கடலில் கலந்து வீணாகும் காவிரி நீரை நீரேற்றுத் திட்டம் மூலம் மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதோடு, சரபங்க நதியில் இணைத்தால் சேலம் மாவட்டம் முழுவதும் செழிப்பாகும்.

இதேபோல, தோனிமடுவில் தடுப்பணை கட்டினால், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிப் பெறும். இந்தத் திட்டங்களை நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூர் அணை மீது ஏறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால், செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணை முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அணையின் உபரி நீர் போக்கியான 16-ஆம் கண் பாலம், காவிரி பாலம் அணையின் வலது கரை, இடது கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். 16-ஆம் கண் பாலம் வழியாக பாதசாரிகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.   காவிரி பாலம் பகுதிக்கு மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக உறுப்பினர் பார்த்திபன் காவிரியில் இறங்க முயன்றார். இதைத் தடுத்த போலீஸாருக்கும் தேமுதிக நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர்களும் கீழே விழுந்தனர். இதையடுத்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தொடர்ந்து, மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட சில தேமுதிகவினர் காவிரி கரைக்குச் சென்றனர். சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.  மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக 320 பேர் கைது செய்யப்பட்டனர்.

Comments
Loading...