தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகத்திற்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: தமிழ் தேசியக்கூட்டமைப்பு

சர்வதேச கண்காணிப்பை நீடிக்கச்செய்து, உலகத்திற்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”ஐ.நா. 34-1 தீர்மானத்திற்கமைய எழுத்து மூலமான அறிக்கை நாளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சொந்த விவகாரங்களை தாமே கையாள்வதற்கு ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் 3 பிரதிநிதிகளை ஐ.நா.விற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களை தாமே கையாள்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலேயே சர்வதேச விசாரணைக்கு கட்டளையிடப்பட்டது.

அரசாங்கத்தின் செய்பாடுகளின் தாமதம் எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் நியமிக்கும் பணிகளிலும் பாரிய தாமதம் நிலவியது. ஆனால், இந்த தாமதங்களுக்கான காரணம்கூட முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில், ஐ.நா.வின் புதிய தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அத்தீர்மானத்தை ஏற்று அதற்கு இணை அனுசரணை வழங்க வேண்டும். அது இலங்கையின் கடப்பாடு.

இது தொடர்பாகவும் கூட்டமைப்பிற்கு எதிராக பொய் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதாவது நாம் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான பரப்புரை. புதிய தீர்மானம் நிறைவேற்றப்படாவிடின் இந்த விடயங்களை சர்வதேச சமூகம் கையாள முடியாது. இதனையே ஜனாதிபதி கோருகிறார். ஆனால், இதற்கு இடமளிக்காது உலகத்திற்கு இலங்கை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Comments
Loading...