தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக செஸ் போட்டி ஆனந்த்-கார்ல்சன் கடும் மோதல்

ஆனந்த்-கார்ல்சன் இடையிலான உலக செஸ் போட்டியில் 10-வது ரவுண்ட் டிராவில் முடிந்தது.

ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனும் (நார்வே), முன்னாள் சாம்பியன் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தும் (இந்தியா) மோதி வருகிறார்கள். 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும் வீரருக்கு சாம்பியன் மகுடம் கிட்டும். முதல் 9 சுற்று நிறைவில் 2-வது மற்றும் 6-வது சுற்றுகளில் கார்ல்சனும், 3-வது சுற்றில் ஆனந்தும் வெற்றி பெற்றிருந்தனர். எஞ்சிய ஆட்டங்கள் டிரா ஆகின. candidate-chess

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 10-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டுமே என்ற எண்ணத்துடன் வந்த ஆனந்த் சற்று பதற்றமாக காணப்பட்டார். கார்ல்சன் வழக்கம் போல் எதை பற்றியும் கவலைப்படாதது போல் சற்று அலட்சியமாக வந்தார்.

வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஆனந்த் தனது ராணிக்கு முன் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். பதிலுக்கு கார்ல்சன் குதிரையை எடுத்து ஆடினார். ஆட்டம் ‘கிரென்பெல்ட்’ முறையில் தொடர்ந்தது. இருவரும் முதல் 10 நகர்த்தல்களுக்கு வெறும் 13 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டனர். பிறகு ஆனந்த் கொஞ்சம் நிதானத்தை கடைபிடித்தார். 15-வது நகர்த்தலில் தலா ஒரு குதிரை வெளியேற்றப்பட்டது. டிரா செய்யும் நோக்கில், சக்தி வாய்ந்த ராணியை அடிக்கு அடி யுக்தியில் 18-வது நகர்த்தலில் கார்ல்சன் விட்டுக்கொடுத்தார்.

23-வது நகர்த்தலின் போது ஆனந்திடம் இரண்டு பிஷப்புகளும், அதற்கு ஈடாக கார்ல்சனிடம் ஒரு குதிரையும், ஒரு பிஷப்பும் இருந்தன. இது ஆனந்துக்கு ஓரளவு சாதகமான நிலையாக தென்பட்டது. ஆனால் 25 முதல் 30 நகர்த்தல்களுக்குள் இருவரது பிஷப்புகளும், குதிரைகளும் வெட்டப்பட்டதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. 32-வது நகர்த்தலின் போது இருவரிடமும் இரண்டு யானைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன. அப்போது ஆட்டத்தை ‘டிரா’ செய்ய ஒப்புக் கொண்டனர். ஆட்டம் 3 மணி 20 நிமிடங்கள் நடந்தது.

இந்த தொடரில் ‘டிரா’ ஆன 7-வது ஆட்டம் இதுவாகும். 10-வது சுற்றின் முடிவில் கார்ல்சன் 5½ புள்ளிகளும், ஆனந்த் 4½ புள்ளிகளும் பெற்றிருக்கிறார்கள். பட்டம் வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ள கார்ல்சன் எஞ்சிய 2 ஆட்டங்களிலும் ‘டிரா’ செய்தாலே போதும்.

அதே சமயம் ஆனந்த் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பட்டத்தை கைப்பற்ற முடியும். குறைந்தது ஒரு ஆட்டத்தில் வென்று, இன்னொரு ஆட்டத்தை டிரா செய்தால் தலா 6 புள்ளிகளுடன் டைபிரேக்கருக்கு ஆட்டத்தை கொண்டு செல்லலாம்.

இன்று ஓய்வு நாளாகும். நாளை கருப்பு நிற காயுடன் ஆனந்த் விளையாடுவார்.

Comments
Loading...