Designed by Iniyas LTD
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கிடையாது – அன்புமணி
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கிடையாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பசுமை பாதுகாப்பு பிரசாரம் சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– ஜூலை 25–ந் தேதியை பசுமை தாயகம் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏரிகளை தூர்வாருதல், மரக்கன்று நடுதல் என இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறோம். மரங்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று 2007–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 9 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆணையம் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் இயற்கை வளங்களை பாதுகாக்க முயற்சி செய்து வரும் பியூஷ் மனுசை பாராட்ட வேண்டும். வக்கீல்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தவறான அணுகுமுறை. மூத்த வக்கீல்கள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்துல்கலாமுக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் கேட்டுள்ளது. ஆனால் 1.7 ஏக்கர் நிலம் தான் இருக்கிறது என்று மாநில அரசு கூறி உள்ளது. இதில் உள்ள அரசியல் உள்நோக்கம் எங்களுக்கு புரியவில்லை. தமிழக அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டமன்ற தேர்தலிலேயே கூட்டணி வைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கிடையாது. சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அதுவே நேர்மையாக நடக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நடத்தப்போகிறது.
இது எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் கோர்ட்டை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், பசுமை தாயகம் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.