Designed by Iniyas LTD
உள்ளாட்சி தேர்தலில் பா ஜ க தனித்து போட்டி!
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து நின்று போட்டியிடும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் தங்கள் தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். ஒரேயடியாக மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத்தேர்வை வேண்டாம் என்று நிறுத்தி வைக்க முடியாது. தற்போது அளித்துள்ள கால அவகாசத்தில் மாணவர்கள் தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியை தமிழகத்தில் இருந்து முற்றிலும் ஒழித்ததால் இந்த 50 ஆண்டுகளில் தமிழ் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? தமிழ் மட்டும் படித்தவர்களுக்கு எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இந்தி படிப்பதை கட்டாயமாக்கும் நிலையை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். கட்டாயப்படுத்தப்பட்டால் இந்திக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் முதலில் இருப்போம். ஆனால் தமிழக மாணவர்கள் ஒரு மொழியை படிக்க விரும்பும் போது அதை படிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்கிறார் என்றால் அது மிகப்பெரிய துரோகமாகும்.
சமஸ்கிருதம் நம்முடைய நாட்டின் மொழி. அதை காக்க வேண்டியது நம் கடமை. நாம் அனைத்து மொழிகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பல மொழிகளை கற்பதில் தடை ஏதும் இருக்க கூடாது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சவாரி செய்த காங்கிரஸ் கட்சி வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலிலாவது தனித்து நின்று பலத்தை காட்டட்டும். காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் தனித்து நிற்கட்டும். பா.ஜ.க.வை பொறுத்தவரை பெரும்பாலும் நாங்கள் தனித்தே நிற்போம். முன்பு ஓரிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தோம். இப்போது அதற்கான வாய்ப்பு குறுகிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.