Designed by Iniyas LTD
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மகிந்த வாக்குமூலம்…
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நாளைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நாளை காலை- 10 மணிக்குவாக்குமூலம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உதவி காவல்துறை கண்காணிப்பாளரொருவரின் தலைமையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் செல்லும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீத் நொயார் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு தடவைகள் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை என்பது நினைவில்கொள்ளத்தக்கது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
இதேவேளை, வாக்குமூலம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளதாக முன்னர் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் அனுப்பியதாகவும்,எனினும் தற்போது அதனை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தப்படுவதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.