Designed by Iniyas LTD
ஊழியின் தெருக்கள்

…
அழுதழுது
பழுதுபோய்
நிலம் நனைக்க வழியின்றி
காய்ந்துபோன
கருவான்
சற்று முன்தான்
கடைசிச்சொட்டு
துளியோடு ஓய்ந்திருந்தது..
இயல்புக்குத் திரும்பியிருந்த
இரத்தம் தோய்ந்த அந்த வீதிகளில்
அச்சம் போர்த்திய கணங்கள்
அங்குமிங்கும் திட்டுத்திட்டாய்.
அன்றிரவு வான் அழுத ஊமை விழியில்
ஊர் நனைந்தது. .
எம் துயரறியாது இனி
சுவடழிக்கப்படும்
எம் தெருக்களிலேயே
எம் குலதெய்வம் பார்த்திருக்க
பறிபோவோம் நாம்
இனி நாம் ஒவ்வொருவராய் இழப்போம்
அதிகாரத்தின் பெயரால். .
அந்தத் தெருவில்
எம் அன்னையின்
மழலையர் இருவர்
சன்னத்தால் துளைக்கப்பட்ட
அதே தெருவில்
நீதி சேடமிழுத்துக் கிடக்கின்றது.
திராணியற்ற எம் வாழ்வோ
இன்னும் எதைக் கொண்டு
நம்பிக்கை கொள்ளும்?
வேரோடிருந்த மரம் சாய்ந்த பின்
இந்தப் பறவைகள் எங்கே போகும்?
எதைச்சொல்லி எமைஆற்றுவோம்?
நாளை எந்தச் சன்னமும்
எமை துளைக்கலாம்
எம் தெருவே எம் குருதி புசிக்கலாம்
அதற்குள் அழியாத வரலாற்றை
எழுத வேண்டும் எம் கரங்கள்
நேற்றிரவு ஊழியின்
தீப்பந்த இரவு இனி..
*
-யோ. கவுதமி