Designed by Iniyas LTD
எதிர்வரும் 24 ஆம் திகதி புதிய அரசின் சூழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்
ஐநா. விசாரணை அறிக்கையினை வெளியிடும் காலத்தை தாழ்த்தவும், உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பே என்பதை தமிழ் சமூகம் கோரியதன் அடிப்படையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணையினை கோரியிருந்தது. இதற்கமைய குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவும் உள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கையினை குறித்த காலத்தில் வெளியிடாமல் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் ஐ.நா ஆணையக விசாரணை அறிக்கை வெளியாகும் காலத்தை தாழ்த்தவும் புதிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதனை எதிர்த்து நாம் எதிர்வரும் 24ம் தியதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம் என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இ.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலத்திற்கு காலம் இன அழிப்பின் பரிமாணங்களை உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே எமக்கு நியாயம் வேண்டும். அதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையினைக் கோரியிருக்கின்றோம்.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ள அறிக்கையினை, காலம் தாழ்த்தி வெளியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் எதிர்வரும் 24ம் திகதி குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு சகல அரசியல் தரப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.