தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எது நடக்கக்கூடாதென அஞ்சியிருந்தோமோ அது நன்றாகவே நடக்கிறது! பறிபோகும் தமிழர் கடல்!

Untitledமுல்லைத்தீவு கொக்குளாயில் தமிழ் அதிகாரிகளது வெளிநடப்பின் மத்தியினில் சிங்கள மீனவர்களிற்காக நிலஅளவைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இப்பகுதியிலுள்ள கரைவலைப்பாடுகள் தொடர்பினில் அளவீட்டுப் பணிகள் நில அளவைத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கரைவலைப்பாடு அளவீட்டுப் பணிகள் தொடர்பில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியிலுள்ள மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு 1980 ஆம் ஆண்டுகளின் பின்னர், தமிழ் மீனவர்கள் வசமே இருந்து வந்தது. குறித்த பகுதியில் 10 கரைவலைப்பாடு பிரிவுகள் இருப்பதாகவும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியிலுள்ள கரைவலைப்பாடு பிரிவுகளில் பெரும்பாலானவை தமிழர் வசமே இருந்ததாகவும் தமிழ் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் 80 ஆண்டு காலப்பகுதியில் சிங்களவர்களுக்கு உரிமையாக இருந்த ஒரிரண்டு கரைவலைப்பாடுகளை தமிழர்களுக்கு விற்றுவிட்டு சிங்கள மீனவர்கள் சென்றதாகவும் தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த சிங்கள மீனவர்கள், ஆக்கிரமித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் தமக்கான கரைவலைப்பாடு உரிமையைப் பெற்றுத் தருமாறு கோரி, தமிழ் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், இதுதொடர்பான விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்தது.
இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரரணையின் போது, முன்னர் நில அளவைத் திணைக்களம் மேற்கொண்ட அளவீட்டுப் பணிகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்ட நீரியல் வளத் திணைக்களம், அந்த அளவீட்டுப் பணிகள் தமது மேற்பார்வையின் கீழ் செய்யப்பட்டதாக கூறியிருந்தது.
இதனையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கடற்தொழிற் நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர், அந்தப் பகுதிக்குரிய கிராம உத்தியோகத்தர் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் அளவீட்டுப பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதன்பிரகாரம் இன்றைய தினம் அளவீட்டுப் பணிகளுக்காக அனைத்து தரப்பினரும் பிரசன்னமாகியிருந்தனர்.
எவ்வாறாயினும் தலைப்பாடு என்ற பகுதியில் இருந்தே அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மீனவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
எனினும், இதனை ஏற்கமறுத்த கொழும்பில் இருந்து வந்த நீரியல்வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், 300 மீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு அப்பால் இருந்து அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், தமிழ் மீனவர்கள் மற்றும் பிரதேச அதிகாரிகள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த அளவீட்டு பணிகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து, பிரதேச செயலக அதிகாரிகள் அளவீட்டு பணிகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரதேச செயலக அதிகாரிகள் இல்லாத நிலையிலும், கிளிநொச்சி நில அளவைத் திணைக்களம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அளவீட்டுப் பணிகள் தொடந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அளவீட்டு பணிகள் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
Loading...