தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எனது அழகியின் குறிப்பு: பொன்.காந்தன்

12654292_977286119013569_5527431594186238797_n

நாம் தூங்கினால்
இவை
மயானத்தின் இடிந்த மாடங்களென எழுதப்படகூடும்
இராவணனுக்கு எழுத ஆக்கள் இல்லையாய் இருக்கலாம்
சோகம் அப்பிக்கிடந்த இலங்காபுரியை
வந்துபார்த்துப்போனவனுக்கு
உண்மை தெரிந்தது
பொய்யை எழுதினான்.
விலங்கிடப்பட்ட உண்மை
நடந்து வந்த தொலைதூரத்தில்
மீண்டும் வீழ்த்தப்பட்டது.
திரைகளை கிழித்தெறிந்து
வெளியே வந்த ஒரு சொட்டு உண்மை
உலகத்தை ஆள போதுமாயிருக்குமென்பதறிந்த
பத்துத்தலைகளொடு பொருத முடியாத
சூழ்ச்சி வஞ்சகத்திற்கு
வன்னிக்கானகங்கள்
மணலாற்றின் அடர்ந்த பாயிரங்கள்
இன்று போய் போர்க்கு நாளைவாவென
பல முறை சொல்லியிருக்கின்றன.
இதை உரத்துப்பேசவும்
படலங்களை படித்து பொருள் சொல்லவும்
ஆக்கள் இல்லாத தெருவை
பார்த்துப்போவதில்
இன்றைய நாட்களில் மகிழ்கின்றவர்களுக்கு
சாமரம் வீச தொடங்குகின்றோம்.

எல்லா வீரர் கல்லறைகளும் கிண்டப்பட்டுவிட்டன
எல்லாக்குறிப்புக்களும் மூடப்பட்டுவிட்டன.
ஓரத்தில் இருந்து எல்லாவற்றுக்காகவும்
விம்மலும் விசும்பலும்………
பழைய இரும்புகளை விற்கும் கடைக்காரர்போல
கொற்றவையை
அவளிள் ஆத்ம சங்கீதத்தை மூடிக்கட்டி
கொடுக்கவும் தொடங்குகின்றோம்.
அவள் வெள்ளித்திரைகளின் வைத்து
ஆளாளுக்கு துகிலுரிய போகின்றார்கள்
தான் கற்பழிப்பது
தன் தாயென உணராமல்
மகனே தடுமாறும் காலத்தை வஞ்;சகம் பிரசவிக்கின்றது
எனது நிலத்தில்………
ஐயகோ!
பெயரற்ற அழகியாய் இப்பூமித்தெருவில்
இவள் என் அரசியென
என் இளவல்கள் பொங்கிப்பூரிக்காத படி
எடேய்
மேய்ப்பனற்ற செம்மறிகளே
அலையவிடு அவளை!
வலைஞன் மடத்தில் சன்னம்பட்ட
என் குழந்தையை
ஒரு கணமும் அழமுடியாமல்
மணலில் புதைத்துப்போனது
எவனுக்கடா தெரியும்
என் பிள்ளையின் மணல் மேட்டை
நானே தேடுகிறபோது
ஈழ காவியத்தை எவனடா எழுதுவது!
இராவணபோருக்குப் பின்
இலங்கைபுரியை பார்ப்பதற்கு புரட்டுக்காரனை
அழைத்துவந்தவன் பற்றி எனக்குத்தெரியாது
ஆனால்
இன்று குறிப்புக்களை பத்திரப்படுத்திவைப்பேன்
நன்றி காலத்திற்கு.

பொன்.காந்தன்

Comments
Loading...