தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

என்டிடிவிக்கு ஒரு நாள் தடை: எதிர் மனு டிசம்பர் 5ம் தேதி விசாரணை

ndtv24x7என்டிடிவி மீதான ஒரு நாள் தடையை நீக்கக் கோரிய வழக்கு டிசம்பர் 5ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்துக்குள் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட பாதுகாப்பு உத்திகளை, விதிகளை மீறி என்டிடிவி இந்தியா சேனல் ஒளிபரப்பியதாகக் கூறி அந்த சேனல் ஒளிபரப்புக்கு நவம்பர் 9-ஆம் தேதி மட்டும் ஒருநாள் தடையை விதித்து மத்திய அரசு கடந்த 2-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் என்டிடிவி இந்தியா ஹிந்தி சேனல் மீது ஒரு நாள் தடை விதிக்கும் முடிவை மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையே, தங்கள் தொலைக்காட்சி சேனலுக்கு விதிக்கப்பட்ட ஒருநாள் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் என்டிடிவி இந்தியா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: என்டிடிவி-யின் ஹிந்தி மொழி செய்திச் சேனலை நவம்பர் 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. அரசியல்சாசனப்படி இந்த நடவடிக்கை சரிதானா? என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். எந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உகந்தது அல்ல என்று கூறி, இதனை டிசம்பர் 5ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

Comments
Loading...