தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு

ஐ.பி.எல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம், துணை நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6வது ஐ.பி.எல் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட முடியாது என தீர்ப்பளித்தது.chennai-super-kings

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன், தான் நிர்வாக இயக்குனராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸை துணை நிறுவனமான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றி முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

இதன் பின்னர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஐ.பி.எல். அணியான சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் உரிமத்தை முழுமையாக துணை நிறுவனமான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அணியின் பங்குதாரருக்கான பங்குகள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கு தாரர்களுக்கு முறையான அனுமதி பெற்று அளிக்கப்படும். சிமெண்ட் உற்பத்தியில் மட்டும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முழு கவனத்தையும் செலுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமம் கைமாறி இருப்பதன் மூலம் என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிகிறது.

Comments
Loading...