Designed by Iniyas LTD
எம்மால்சுதந்திரமாக கடமையாற்ற முடியவில்லை, கிழக்கு பல்கலை விரிவுரையாளர்கள்.

தமிழர் தாயகத்தின் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுதந்திரமாகவும் மகிழ்வுடனும் கடமையாற்றமுடியாத சூழ்நிலையுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுமத்தியுள்ளது.
இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளர் வைத்தியர் கே.ஈ.கருணாகரன், பொருளாளர் கே. சத்தியசேகர், உப தலைவர் வைத்தியர் எம். வர்ணகுலசிங்கம் உபசெயலாளர் டி. சதானந்தன், முன்னாள் செயலாளர் வைத்தியர் எம். பக்திநாதன் பத்திர ஆசிரியர் திரு டி. மதிவேந்தன், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பிரதிநிதி திருமதி கெனடி,விஞ்ஞானங்கள் பீடத்தின் பிரதிநிதி வைத்தியர் எஸ் சதானந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தினரின் பிரச்சனைகள் தொடர்பாக 2013.11.04ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மேற்படி பிரச்சினை தொடர்பான மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது இருப்பினும் இது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லையென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இப்பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி சிறீலங்கா அதிபர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்களையும் நேரடியாக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
எமது பல்கலைக்கழகத்துக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்க்கமுடியாத சூழ்நிலையிலேயே அங்குள்ள பிரச்சினைகளை பட்டியலிடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இங்கு கடமையாற்றும் பலர் சம்பளத்துக்காக அல்லாமல் கௌரவம் மற்றும் மண்மீது கொண்ட பற்று காரணமாக இந்த தொழிலில் இணைந்துள்ளனர். திறமைகளைக்கொண்ட ஆசிரியர்களை நாங்கள் கொண்டுள்ளோம். அவர்களை நாங்கள் எமது பல்கலைக்கழகத்துக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
அதற்காக சுதந்திரமாகவும் விருபத்துடனும் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு சூழல் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் பலர் என்ற எண்ணிகையினை விடுத்து ஆசிரியர்களின் உரிமையினை பாதுகாப்பதே எங்களது நோக்கமாகும்.
ஆசிரியர்களின் பதவி உயர்வு நிரந்தரமாக்கல் விடுமுறைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்படுவதுடன் பல்வேறு வகையான வார்த்தை பிரயோகங்களும் மன ரீதியான தொந்தரவுகளும் வழங்கப்பட்டுவந்த நிலையில் அவற்றினை தடுப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இது தொடர்பில் பல்கலைக்கழக பேரவைக்கு குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட, திரிவுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்கி பல்கலைக்கழக பேரவையின் பெயரில் நடவடிக்கையெடுக்கப்படுகின்றன. இவற்றில் பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறைக்கும் பல்கலைக்கழக சட்டத்துக்கும் எதிரான செயற்பாடுகளும் உள்ளடங்கப்படுகின்றது.
குறிப்பாக பல்கலைக்கழக சுற்று நிருபபடி பதவியுயர்வு மறுக்கப்பட்டுள்ளதுடன் கருத்தில் கூட கொள்ளப்படாத நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் குறிப்பிட்ட சில விரிவுரையாளர்களின் பதவியுயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பட்டம் வழங்கிய திகதியும் மாற்றப்பட்டுள்ளது. நிரந்தரமாக்கப்பட்ட விரிவுரையாளர்கள் சட்டத்துக்கு முரணாக ஏனைய பீடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் அங்கீகாரமளிக்கப்படாத குழுக்களினால் சில விரிவுரையாளர்களின் சம்பளங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விரிவுரையாளர்களுக்கான விடுமுறை வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள் மாற்றப்பட்டு ஆள்சார் தன்மையிலhன செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாக முறைகளில் எதேச்சதிகாரமாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
பல்கலைக்கழக முகாமைத்துவத்தில் வெளிப்படைத் தன்மையற்ற தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என பல குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன. கிழக்கு பல்கலைக்கழக பக்கச்சார்பின்றி அரசியல் சார்பின்றி பல்கலைக்கழக ஆசிரியர்களின் நலன்களை மட்டும் நோக்காகக்கொண்டே செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.