Designed by Iniyas LTD
எம் பிள்ளைகளை உயிருடன் ஒப்படைத்தால் துரோகங்களை மன்னிக்கத் தயார்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது தென்னிலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. எனினும், அதனால் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லையென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தமது பிள்ளைகளை ஒப்படைக்க முன்வந்தால், யாராக இருந்தாலும் அவர்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகங்களை மன்னிக்கத் தயாராக உள்ளதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்தார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது, எதிர்வரும் 20ஆம் திகதி ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அதனை நினைவுறுத்தி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) பாரிய அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். அதுகுறித்து நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை நம்பி காணாமல் ஆக்கப்பட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள லீலாவதி, தமது குரலை சர்வதேசத்திற்கு ஒலிக்கச் செய்யும் வகையில் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
இப்போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி தமது பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமென அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேலும், காணாமல் போனோர் விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தில் போராடுவதற்கான உரிமை மாத்திரமே கிடைக்கப்பெறுள்ளதாக தெரிவித்த லீலாவதி, அதனைத் தவிர வேறெந்த நன்மைகளும் கிடைக்கவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. அமர்வில் கலந்துகொள்ள செல்லும் அரசியல் தலைவர்களும் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்களும் மனசாட்சியுடன் செயற்பட்டு, தமக்காக குரல்கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.