தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

siva-sasikala-pushpa-600-30-1469881203மிரட்டல், தாக்கிய வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர்(எம்.பி) சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தில்லி விமான நிலையத்தில், திமுக. மாநிலங்களவை உறுப்பினர் சிவாவை, கடந்த வாரம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கினார். இது தொடர்பாக, அவரது கட்சியின் தலைமை நேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, தில்லி சென்ற சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கட்சியின் மேலிடம் வற்புறுத்துவதாகவும் கூறினார்.
இவரின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சசிகலா புஷ்பாவை நீக்கம் செய்து, அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பாவின் கணவர் டி.லிங்கேஸ்வரா திலகம், மகன் எல்.பிரதீப் ராஜா ஆகியோர் முன் ஜாமீன் கோரி புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், நாங்கள் இருவரும், ஒரு நபருக்கு மிரட்டல் விடுத்து, காயம் ஏற்படும் வகையில் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எங்கள் இருவரது மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பகையால் வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்காகும். நான் (லிங்கேஸ் வரன் திலகம்) எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர். எனது மனைவியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, எனது மகன், என் மீது இப்படி ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், போலீஸார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். ஆகையால், எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இது தொடர்பாக காவல்துறை தரப்பு கருத்தறிய கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதையடுத்து, மனு தொடர்பாக அண்ணா நகர் போலீஸார் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 8-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Comments
Loading...