Designed by Iniyas LTD
எழுவரின் விடுதலையை கோரி மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி, மக்களுக்கு அழைப்பு
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சி, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த மனித சங்கிலி போராட்டத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 வருடங்களாக சிறைவாசகம் அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்யும் தமிழக ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கதோர் விடயமாகும். மேலும் ஆளுநரின் செயற்பாடு, ஜனநாயக நெறிமுறைகளைப் பின்தள்ளி அதிகாரத்தைத் தவறுதலாக பயன்படுத்தும் அத்துமீறலாகும். தேவேளை எழுவரின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுக்க, தமிழக அரசு தற்போது தவறியுள்ளது.
இதனால் எழுவரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் மற்றும் தமிழக அரசு இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தவுள்ளோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணிவரை இப்போராட்டத்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். ஆகையால் இப்போராட்டத்திற்கு வலிமை சேர்ப்பதற்காக அனைத்து சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும்” என சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.