தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏனைய அரசியல்வாதிகள் போன்று சந்தர்ப்பவாத அரசியலை நாங்கள் செய்யவில்லை – தவராசா கலையரசன்

முன்னைய ஆட்சியாளர்களால் கிழக்கு மாகாண சபையில் சமத்துவப்படுத்தல் என்பதன் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டது அந்த நியமனங்களில் தமிழ்மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் முயற்சியினால் அந்தப்பிரதேசத்தில் வாழும் 111 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமானது பிரதேசசபை தவிசாளர் வை.கோபிகாந்த் தலைமையில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காரைதீவு பிரதேசசபையினை பொறுத்தவரையில் கடந்த காலங்களில் தவிசாளர்களின் நடவடிக்கை காரணமாக இங்குள்ள பிரதேசசபை உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதன் காரணமாக பிரதேசசபையின் செயற்பாடு மந்தகதியில் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையொன்று இங்கு காணப்பட்டது.

இந்நிலையானது புதிய தவிசாளரின் தெரிவின் பின்னர் சற்று நிலை மாறி அனைத்து உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மக்களுக்கான அபிவிருத்தி பணியினை முழுநேரபப்பணியாக இருந்து ஆற்றவேண்டும் என தவிசாளர் எடுத்துக்கொண்டதன் ஒரு அங்கமே இன்றைய இந்த நிகழ்வுமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது நீண்ட காலமாக எமது மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு குரல்கொடுப்பவர்களாகவே செயற்பட்டோமே தவிர அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு எந்த அரசியலையும் செய்யவில்லை.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இருந்தவர்கள் எந்த அபிவிருத்தி வேலையாக இருந்தாலும் அனைத்திலும் கூட்டமைப்பினை ஒதுக்கிவிட்டே அனைத்தையும் தங்களுக்கு சாதகமான முறையில் செய்திருந்திருந்தார்கள். அதன் காரணமாக மகிந்த ராஜபக்சவினுடைய ஆட்சிக்காலத்தில் எமது தமிழ் மக்கள் நன்கு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதோடு அவர்களது பிரதேசங்களும் அபிவிருத்தியில் புறக்கணிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்றுதான் இன்றைய ஆட்சியிலும் பாரிய எந்த அபிவிருத்தி வேலைப்பாடுகளும் தமிழர் பிரதேசங்களில் நடைபெறவில்லை. மாறாக எங்களது கருத்துக்களை ஜனநாயக ரீதியாக கூறக்கூடிய ஒரு நிலை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரையில் கடந்த கால ஆட்சியின் போது சமத்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டது. அந்த நியமனங்களின் போது தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்கள்.

அன்றிருந்த முதலமைச்சர் வட, கிழக்கு மாகாணத்தினை பிரித்து விட்டு இன்று கிழக்கு மாகாணசபையில் கள்ளாட்சி நடைபெறுகின்றது என்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றார்.

இவர் முதலமைச்சராக இருந்த காலத்திலேதான் தமிழர்களது நியமனங்கள் குறிப்பாக முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உயர்வான சித்திகளை பெற்றும் அவர்களுக்கான நியமனங்களை பெறமுடியாமல் நீதிமன்றம் செல்லவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்தது.

இதனை ஒருகணம் சிந்திக்கவேண்டியவராக முன்னாள் முதலமைச்சர் இருக்கவேண்டும். அன்று கிழக்கு மாகாணசபையில் அமைச்சர்களும், ஆளுனரும் சேர்ந்து தமிழ்மக்களை முற்று முழுதாக புறக்கணித்தார்கள்.

இதுதான் அன்றிருந்தவர்கள் தமிழ்மக்களுக்காகச் செய்த சேவைகளாகும். போட்டிப்பரீட்சை, நேர்முகப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்கள்.

பல்கலைக்கழகம் முடித்து பல வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டிய ஒரு நிலை பட்டதாரிகள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் கல்விக்கல்லூரியில் இருந்து வெளியேறுபவர்கள் ஒரு குறிப்பட்ட காலத்தில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய இருக்கின்றது.

இவ்வாறான ஒரு சீரற்ற கல்வி நிருவாகம் இந்த நாட்டிலே இருப்பதும் குறிப்படத்தக்கவிடயமாகும். இந்த நாட்டிலே தமிழ்ப்பேசும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எமது தமிழரசுக்கட்சியின் ஆரம்ப கர்த்தா முதல் இன்று வரையுள்ள சம்பந்தன் வரை அயராது பாடுபட்டு உழைத்துவருகின்றார்கள்.

இந்தக்காலகட்டத்தில் எம்மினம் பல பாதிப்புக்களை சந்திக்கநேர்ந்தது. அதனையும் சகித்துக்கொண்டே எமது தமிழ்ப்பேசும் மக்களுக்கான நிலையான தீர்வினை பெறவேண்டும் என்பதற்காக இன்றும் பாடுபட்டுக்கொண்டு வருகின்றோம்.thavarasa_kaliayarasan

இந்த நாட்டிலே சிறுபான்மைச்சமூகம் நிலையான நிம்மதியான தீர்வினை பெறவேண்டும் என்பதற்காகவே எமது தமிழ்த்தலைமைகள் போராடி வருகின்றார்களே தவிர வெறுமனே தமிழ்மக்களுக்காக அல்ல என்பதனை அனைவரும் புரிந்து செயற்படவேண்டும்.

தமிழ்ப்பேசும் இனம் என்ற ரீதியில் த.தே.கூட்டமைப்பு பல விட்டுக்கொடுப்புக்களுடன் பயணித்து வருகின்றது. இச்செயற்பாடானது நீடித்து நிலைக்கும் என்பதற்கு இல்லை. எமது கட்சியும் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கரையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

ஏனைய அரசியல்வாதிகள் போன்று சந்தர்ப்பவாத அரசியலை நாங்கள் செய்யவில்லை. இதனை எமது மக்கள் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் த.தே.கூட்டமைப்பினை பலப்படுத்தி எமது இறுதி இலக்கினை அடைவதற்கு துணை நிற்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் உப தவிசாளர் கே.தட்சணாமூர்த்தி பிரதேசசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் பிரதேசபையின் செயலாளர், குடிநீரை பெறுவதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Loading...