Designed by Iniyas LTD
ஐஎஸ் அமைப்பில் இணைய சென்ற இளைஞர்கள் கைது
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக மகாராஷ்டிர மாநிலம், நாகபுரி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் செல்லவிருந்த 3 ஹைதராபாத் இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர். இதுகுறித்து தெலங்கானா காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக அந்த மூவரும் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதனிடையே, அவர்கள், நாகபுரி வழியாக ஸ்ரீநகருக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேரவுள்ளதாக தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை காலை ஸ்ரீநகருக்குச் செல்லும் விமானத்தில் அந்த மூவரும் ஏற முயன்றனர். அப்போது தெலங்கானா போலீஸாரும், பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
அவர்களுக்கு, இதுவரை பயங்கரவாத அமைப்புடன் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் அவர்களிடம் மத பயங்கரவாத மனப்போக்கு காணப்படுகிறது. இதனால் எவ்வகையிலாவது ஸ்ரீநகருக்குச் சென்றுவிட்டால் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்கான வழிகளை ஆராய முடியும் என்று அவர்கள் திட்டமிட்டனர். எனினும், அதற்காக அவர்கள் எவ்விதத் திட்டங்களையும் வகுக்கவில்லை என்றார் அவர். இதுகுறித்து ஹைதராபாத் சிறப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அந்த மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் மூளைச் சலவை செய்யப்பட்டனர்.
இதனால் ஈர்க்கப்பட்ட அவர்கள் அந்த அமைப்பில் இணையவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கி, அந்தத் திட்டத்தை முடக்கினர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக அவர்களது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பயங்கரவாத அமைப்பில் சேரும் திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லை. இருப்பினும், அதுபோன்ற திட்டம் அவர்கள் மனதில் இருந்தால் அதை வேரறுப்பது அவசியமாகும். மூவரும் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அதன்பிறகு விசாரணை மேற்கொண்டு, அவர்களது மனவோட்டம் குறித்து அறிந்து கொள்ள முடியும். கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் அவர்களுக்கு மத பயங்கரவாத அமைப்பில் இணையும் எண்ணம் இருந்தால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்படவில்லை; விசாரணைக்காகவே அவர்களை அழைத்துச் செல்லவுள்ளோம் என்றார் அவர். தெலங்கானாவில் கார் விபத்தில் உயிரிழந்த சிமி பயங்கரவாத அமைப்பின் தலைவர் சலாலுதீனுடன் இந்த இளைஞர்கள் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பயங்கரவாத அமைப்பில் சேரும் திட்டத்துடன் மும்பை மல்வானி பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளனர்; மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர்.