Designed by Iniyas LTD
ஐநாவில் வலுவிழந்த தமிழர் இனப் படுகொலை விவகாரம்!
ஸ்ரீலங்கா அரசுக்கு பெரும் சவாலாகவும் தமிழ் ஈழருக்கு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் கூட்டத் தொடரிலும் தமிழ் ஈழ மக்களின் பிரச்சினையை முறையாகவும் நேர்மையாகவும் கையாள ஐ.நா தவறியுள்ளது. நடந்த தமிழ் இனப்படுகொலைப் போரில் நீதியாக நடக்கத் தவறிய ஐ.நா அது குறித்த விசாரணையிலும் தன்னுடைய பூகோள நலன் சார்ந்த அடிப்படையிலேயே அணுகியுள்ளது என்பது மிகவும் கவலை அளிக்கும் விடயம்.
2009இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போர் தமிழ் ஈழ மக்களின் நெஞ்சில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. போரில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் தமிழ் ஈழ மக்கள் அங்க இழப்புக்களுக்கும் பெரும் உளவியல் பாதிப்புக்களுக்கும் உள்ளாகியுள்ளனர். போர் என்பது நிகழும் காலத்தில் மாத்திரம் போர் நிகழ்த்தப்பட்ட மக்களை பாதிப்பதில்லை. ஒரு இன அழிப்புப் போர் என்பது அதனையும்கடந்து வரலாற்று ரீதியாக அம் மக்களை பாதிக்கும்.
ஸ்ரீலங்கா அரசு தமிழ் ஈழ மக்கள்மீது மேற்கொண்ட போர் என்பது ஸ்ரீலங்கா அரசின் பேரினவாத மனநிலையின் வெளிப்பாடு ஆகும். எனவே போருக்கான நீதி என்பது பேரினவாதப் பிரச்சினையை தீர்க்கும் அடிப்படையை கொண்டது. எனவே தமிழ் இன படுகொலைக்கு ஐ.நா சரியான தீர்வை வழங்க வேண்டியது, மனித உரிமை குறித்த உலக அமைதி குறித்த அமைப்பு என்ற வகையில், அதன் கடமையாகும். ஆனால் ஐ.நா இம்முறையும் அதனை நிறைவேற்றத் தவறியிருக்கிறது. குறிப்பாக ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை ஐ.நா ஏற்றுக்கொள்ளாதுள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அது தொடர்பிலான வாய்மொழி மூல அறிக்கையை இம்முறை பேரவையில் வழங்கியிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா தொடர்பில் ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அதற்கு ஸ்ரீலங்கா அனுசரணை வழங்கியிருந்தது. அதில் முக்கியமாக சர்வதேச நீதிபதிகள் அ டங்கிய கலப்பு விசாரணை ஒன்று பரிந்துரைக்கப்பட்டது.
உள்ளக விசாரணை ஒன்றையே நடத்த துணியாத ஸ்ரீலங்கா அரசு, கலப்பு விசாரணைக்கும் சாக்கு போக்கு காட்டி, சுத்துமாத்துப் புரிகிறது. ஸ்ரீலங்காவில் உள்ள ராஜபக்ச ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளதுடன் கலப்பு விசாரணையைகூட ஸ்ரீலங்கா அரசு நராகரித்துள்ளது. அதன் அரச தலைவர், மற்றும் பிரதமர் கலப்பு விசாரணைக்கு இடமில்லை என்றும் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாக கூறி வருகின்றார்கள்.
போர்க்குற்றவாளிகளான மகிந்த ராஜபக்ச, மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை உயிரை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்று ஸ்ரீலங்கா மக்களுக்கு இன்றைய ஸ்ரீலங்கா அரசு வாக்குறுதி அளித்துள்ளதையே நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் ராஜபக்சவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்துள்ளதாகவும் ஹைபிரிட் நீதிமன்ற கூடுகளிலிருந்து பாதுகாத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்றைய அரசை புகழ்ந்து வருகிறார்.
ஸ்ரீலங்கா அரசு தன்னை பாதுகாக்கும் அடிப்படையிலேயே காய்களை நகர்த்துகிறது. தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி, அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களுக்கான நீதியை மறுத்து, காலம் காலமாக ஆட்சி புரியும் சிங்கள, பௌத்த பேரினவாத அரசு என்ற அடையாளத்தை பாதுகாத்து வருகிறது. இதன் காரணமாகவே, இனப்படுகொலையை மறைக்கும் வித்திலும் தானும் ஒரு இனப்படுகொலையாளி என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன தன்னையும் பாதுகாத்து வருகிறார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் போருக்குப் பிந்தைய நீதியை நிலைநாட்ட ஸ்ரீலங்கா தவறிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஸ்ரீலங்கா அரசு இந்த விடயத்தில் இனப்படுகொலை குற்றத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படுகிறது என்பதை வெளிப்படையானது. அது தொடர்பில் ஐநா கடுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தவறியுள்ளது.
இதேவேளை, காணி விடுவித்தல், இராணுவக் குறைப்பு, காணாமல் போகச் செய்யப்பட்டவர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற செயற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியதாகவும் ஆணையாளர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவையும் வடகிழக்கில் தமிழ் ஈழ மக்கள்மீது இனப்படுகொலைப் போர் நிகழ்த்தப்பட்டது என்பதை ஏற்கத் தவறிய செயலில் தங்கியுள்ளது. வெளிப்படையான அந்த அணுகுமுறையை முன்னெடுக்காத வரை மேற்கண்ட விடயங்கள் தீர்க்கப்படாதிருக்கும்.
இந்த விடயத்தில் இனப்படுகொலைக்கான நீதியை பெறும் போராட்டங்களை முன்னெடுக்க தவறிய தமிழ் ஈழ மக்களுக்கும் பங்குண்டு. கடந்த காலத்தை போலன்றி ஐ.நா கூட்டத் தொடரையையே மறந்துறங்கிய நிலையில் தமிழ் உலகம் இருந்தது. புலம்பெயர் நாடுகளில் அதற்கான பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை. ஈழத்தில் தமிழ் தலைவர்கள் நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்கத் தவறி இன்றைய அரசின் கூட்டாளிகளாக மாறியுள்ளனர். நல்லூரில் உள்ள ஐ.நாவின் முன்னால் ஒரு போராட்டம் நடைபெற்றிருந்தது. இதனை பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட சாட்சிகளை ஐ.நாவிற்கு கொண்டு சென்று அவர்களின் வாக்குமூலங்களை அங்கு பதிவு செய்து இனப்படுகொலைக்கான நீதியை பெறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்திலும் மே 17 இயக்கத்தை தவிர ஏனைய அரசியல் இயக்கங்களும் கட்சிகளும் இந்த விவகாரத்தை குறித்து கவனம் செலுத்தவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் இன இனப்படுகொலைக்கான நீதியை கோரும் செயற்பாடு பின்னோக்கிச் செல்லுமா என்ற அச்சம் மேலோங்குகிறது.
இவ்வறான நிலமைகளில்தான் ஐ.நாவில் தமிழர் இனப்படுகொலை விவகாரம் ஒரு போர்க்குற்ற விவகாரமாக, மனித உரிமை மீறலாக கடந்து செல்லப்பட்டுள்ளது. இது ஸ்ரீலங்கா அரசுக்கு இன்னும் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையிலேயே விசாரணையை தட்டிக் கழிக்கும் அரசு இனி வரும் காலங்களில் எப்படி காய்களை நகர்த்தி, அரசியல் செய்யும் என்பதை யூகிக்கலாம். நடந்த தமிழ் இனப் படுகொலை்ககான நீதியில்தான் தமிழ் இனத்தின் எதிர்கால இருப்பு தங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாத வரை தமிழ் இனம் மெல்ல மெல்ல அழிவது தவிர்க்க இயலாதது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்களுக்கும், வரலாறு முழுவதும் கொல்லப்பட்ட தமிழ் ஈழ மக்களுக்கும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும், உடல், உள காயங்களுடன் இருப்பவர்களுக்கும் செய்யும் ஆறுதலும் அஞ்சலியும் மாத்திமின்றி உயிரோடு வாழும் தமிழ் ஈழர்களின் எதிர்கால இருப்பும் முள்ளிவாய்க்காலில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து தொடர்ந்து போராடுவோம்.
ஆசிரியர், செண்பகம். 04.07.2016
