Designed by Iniyas LTD
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை – மும்பை ஆட்டம் ரோ!
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் நேற்று இரவு நடந்த சென்னை-மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே சென்னை அணி தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்தது. 23-வது நிமிடத்தில் பிரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் பெலுசோ (இத்தாலி) அடித்த அருமையான ஷாட்டை, மும்பை அணியின் கோல் கீப்பர் அல்பினோ கோம்ஸ் துள்ளி குதித்து அபாரமாக தடுத்து பந்தை வெளியேற்றினார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
51-வது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பில் பெலுசோ கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி அபாரமாக கோலாக்கினார். பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் ஆக்ரோஷமாக வரிந்து கட்டினர். 76-வது மற்றும் 80-வது நிமிடத்தில் கிடைத்த பிரீகிக் வாய்ப்பை வீணாக்கிய மும்பை அணி 88-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் லியோ கோஸ்டா (பிரேசில்) இடது காலால் அடித்த பந்து கம்பத்தில் பட்டு கோலுக்குள் இடி போல் இறங்கியது.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் விறுவிறுப்பான இந்த மோதல் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய சென்னையின் எப்.சி. அணி 2 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை நடந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் முடிவில் சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி, கேரள வீரருடன் மோதலில் ஈடுபட்ட புகார் மீது விசாரணை நடத்திய போட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு மெட்டராசி ஒரு ஆட்டத்தில் பயிற்சியாளராக செயல்பட தடை விதித்தது. இதனால் அவர் நேற்று மைதானத்தில் உள்ள பயிற்சியாளர் இருக்கையில் அமராமல் கேலரியில் இருந்தார். பயிற்சியாளர் பொறுப்பை உதவி பயிற்சியாளர் சையத் பாஷா கவனித்தார்.
இன்று (வியாழக்கிழமை) புனேயில் நடைபெறும் 29-வது லீக்கில் எப்.சி.புனே சிட்டி-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 மற்றும் விஜய் சூப்பர் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.